பறையன்குளம் காணிகளை வனத்துறை கையகப்படுத்திய நிலையில் விடுவிக்க வேண்டும் என்று திருகோணமலை எம்.பி சண்முகம் குகதாசன் வலியுறுத்து







பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப்படுத்தியுள்ள நிலையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட மொரவேவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த குகதாசன் எம்.பி.,
மொரவேவா பகுதியில் அமைந்துள்ள நாலாம் கண்டத்தில் உள்ள காணி உரிமையாளர்கள் தத்தம் காணிகளில் குடியமர நீண்ட காலமாக அனுமதிக்கப்படாமை பற்றியும் அவர்களை உடன் குடியமர்த்த ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு, பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப்படுத்தி உள்ளதாகவும் இவற்றை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வனத்துறை அதிகாரிகள் மேலிடத்தோடு பேசி இது பற்றி அறியத் தருவதாகக் கூறினர்.
பன்மதவாச்சி ஊரில் வடிகால் வசதிகள் சரியாக இல்லை என்றும் இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதாகவும் இதைத் தடுக்க வடிகால்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனடிப்படையில்,வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
முதலிக்குளம் பாடசாலையில் பௌதீக வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் குகதாசன் கேட்டுக் கொண்டார்.
வளப்பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாக கல்வித் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
