பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும். அந்த அமைச்சரவையில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அந்த புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், அந்தந்த துறைக்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் 25 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தமது கட்சியில் உள்ளனர். இதனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரே இடம் பெறுகிறார்.
இதனால், அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது உறுப்பினரான நிபுண ஆராச்சியை மற்றும் ஒரு அமைச்சராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சட்டப் பிரச்சினை காணப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.
அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் குறைந்தளவு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிறைவான சேவை வழங்கப்படும்-என்றார்.