வவுனியாவில் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தை கண்டுபிடித்து காட்சிப்படுத்திய மாணவன் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்

1 month ago




இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து காட்சிப்படுத்திய வவுனியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக பாடசாலை சமூகம் அவரை கௌரவித்துள்ளது.

அகில இலங்கை ரீதியில் நடைபெறும் ரோபோடிக் தொடர்பான புத்தாக்க போட்டியில் 17 வயது மாணவனான சி. கபிலாஸ், இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து அதனைக் காட் சிப்படுத்தியிருந்தார்.

இதன் ஊடாக அவருக்கு தேசிய மட் டத்தில் முதல் பரிசு கிடைத்ததோடு அவருக்கான பதக்கமும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மாணவன்                சி. கபிலாஸ் தெரிவிக்கையில்,

"கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சீட்டை அச்சடிப்பதற்கு அதிகமான பணம் செலவு செய்யப்பட்டதாக எனது பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த செலவைக் குறைப்பதற்கு ஏதேனும் கண்டு பிடித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது.

இதன் ஊடாக ஓர் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். அதில் வெற்றியும் பெற்றேன்.

எனினும் அதற்கான உபகரணங்கள் பலவற்றை வவுனியாவில் பெற்றுக் கொள்வதற்கு முடியவில்லை.

அதனால் கொழும்புக்கு சென்று அந்தப் பொருட்களை வாங்க    வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த நிலையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தை கண்டுபிடித்து காட்சிப்படுத்தியிருந்தேன்.

இந்த கண்டுபிடிப்பை மேலும் விரிவுபடுத்தி இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தை    நடைமுறைப்படுத்துவதற்கு  அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் இதனை இன்னும் திறம்பட செயல்படுத்துவதற்கு என்னால் முடியும்"-என்றார்.