இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுத் தேர்தலை அடுத்து நிச்சயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முதலாவது அமைச்சரவை கூட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இந்த காலப்பகுதி தேர்தல் காலமாகும். அந்த வகையில் நாட்டின் நடவடிக்கைகள் அமைதியான முறையில் நடை பெறவேண்டும்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து எந்தவித வன்முறை சம்பவங்களும் நாட்டில் பதிவாகவில்லை.
அந்த வகையில் தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடத் தேவையான சூழலை புதிய ஜனாதிபதி உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
எது எவ்வாறாக இருப்பினும் அவசர நிலைகள் ஏற்படாது என்ற கணிப்பில் இருக்கமுடியாது.
தேசிய பாதுகாப்பு குறித்த விடயத்தில் முப்படையினர் பங்கு கொள்வர். ஆகவே, முன்னராகவே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பது அவசியமான விடயமாகும்.
ஆகவேதான் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத் தேர்தலை அடுத்து நிச்சயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இதேபோன்று அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் சூழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன அவ்வாறான விடயத்தை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.