தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு
எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது.
ஆனால் 2009க்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கின்றது.
காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடர்ச்சியாக வன்வலு கடந்த மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதனை எதிர்கொள்வதே பாரிய சவாலாக உள்ளது.
அதிலும் பிரிந்து நின்று எதிர்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
ஆகவே ஒன்றாக இணைந்து அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழ்க் கட்சிகளின் பதவி சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு, பல அணிகளாகப் பிரிவடைந்துள்ளனர்.
அவர்களுக்கு இடையிலான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும். இந்தத் தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கின.
இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தமிழ்க் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன.
அவற்றை அவர்கள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரே இலக்கில் செயற்பட முனைவோர்கள் பிரிந்திருந்ததனால் வடக்கு மாகாண தேர்தல் களம் பல்வேறு விதமான சோதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
கிழக்கு மக்கள் விழித்துக் கொண்டமையால் தம்மைத் தற்காத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்
ஆனால், வடக்கில் உள்ள நிலைமை மிக மோசமாகிவிட்டது.
ஆளும் அரசே வெற்றி பெற்றிருப்பதனால் எமது தமிழ்த் தேசியவாத அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகின்றோம் என்கின்ற கேள்வி எழுகின்றது.
எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும்.
இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும்.
ஆகவே, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களிலும் சரி, தமிழ்த் தேசிய உரிமை ஜனநாயகப் போராட்ட விடயங்களிலும் சரி, ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே அவசியமாகும்.
அதனையே மக்களும் விரும்புகின்றார்கள்.
கடந்த பல வருடங்களாக இவ்வாறான ஐக்கிய முயற்சிகளை ஏற்படுத்தியவர்கள் என்கின்ற வகையிலும் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் எனக் கோரிக்கை விடுத்ததன் உரிமையிலும், எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றோம்.
அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆளுக்கு ஆள் துரோகிப்பட்டம் வழங்குவதையும், ஒரு கட்சி வந்தால் இன்னொரு கட்சி வரமாட்டேன் எனக் கூறும் வரட்டு வாதங்களையும் அடியோடு மறந்து விடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதற்குத் தார்மீக பொறுப்பெடுக்க வேண்டியது சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஆகும்.
தமது குறைபாடுகளையும், செயல்பாடின்மையும் இனிமேலாவது திருத்திக் கொள்வதற்கு அவை முன் வர வேண்டும்.
ஆனாலும் தமிழ் மக்கள் இன ரீதியான சிந்தனைதுவத்தை மறந்து தேசிய கட்சிக்கு வாக்களித்தமை என்பது மிகவும் வேதனைக்குரிய பரிதாபகரமான நிலைப்பாடு ஆகும்.
தமிழ் மக்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை எனும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்திவரும் ஆபத்துண்டு.
அந்த மக்கள் எதிர்வரும் காலத்தில் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏனெனில் தேசிய கட்சிகளுக்குள் கரைந்து போவது என்பது தமிழ்த் தேசிய இருப்பை ஒருபோதும் கூர்மையாக தக்க வைக்க கூடிய கள நிலையை உருவாகாது என்பதனையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, எமது முயற்சிக்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்" என்றுள்ளது.