இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து விலக இணக்கம்
நீதித்துறையில் சர்ச்சைக் குரியவராக விளங்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து தாமாகவே விலகிச் செல்ல இணங்கியுள்ளார் என அறிய வருவதாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசு அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை (Impeachment) கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதை அடுத்து இந்த முடிவுக்கு அவர் இணங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
நீதியரசர் கருணாரத்ன தனது இராஜிநாமாக் கடிதத்தை இம் மாத இறுதியில் சமர்ப்பிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் சர்ச்சைக்குரியவராக விளங்கிய நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணா ரத்னவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு பிரேரித்தாராயினும் அப்போதைய அரசமைப்புக் கவுன்ஸில் அதனை நிராகரித்திருந்தது.
அந்தப் பின்புலத்தில் புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனங்களும் தொடர்ந்து இடம்பெறாமல் தடைப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தில் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவுக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனம் வழங்கப்படாமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், மேற்படி நீதியரசர் தொடர்பாக சில விடயங்களைத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
அந்த விடயங்களை முன்னிறுத்தியே அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அரசுத் தரப்பு தயாரானதாகவும் கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ள தற்போதைய அரசு இத்தகைய அந்தப் பெரும்பான்மை மூலம் இது போன்ற குற்ற விசாரணைப் பிரேரணைகளை இலகுவாக முன்நகர்த்த முடியும் என்ற பின்புலத்தில், தாமாகவே பதவியை விட்டு விலகுவதற்கு நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன இணங்கினார் என்று இப்போது கூறப்படுகின்றது.
உயர் நீதிமன்றத்தில் இப்போது பணியில் இருக்கும் வேறு சில உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பாகவும் இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசல் புரசலாக நிலவுவது குறிப்பிடத்தக்கது.