திருகோணமலையில் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளை விடுவிக்க அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்து
திருகோணமலையில் துறைமுக அதிகார சபையால் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தார்.
துறைமுக அதிகார சபை கையகப்படுத்தியுள்ள 5226 ஏக்கர் நிலப்பகுதியில் 1887 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, இந்தப் பகுதியை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டுமென கூறினார்.
இதேபோன்று, வெல்லாவெளியில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் உடனடியாக விடுவித்து உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை நகரத்தில் அமைந்துள்ள மக்ஹய்சர் விளையாட்டு அரங்கம், பாரம் பரியமாக பல சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்தது.
இந்த விளையாட்டு அரங்கை மீண்டும் சரிசெய்து உருவாக்குவதன் மூலம் பல இளம் விளையாட்டு வீரர்களது ஏக்கத்தை தீர்ப்பதோடு, சர்வதேச போட்டிகளை நடத்தி வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.