தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தர் மறைந்தார்

6 months ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில தினங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார் பெருந்தலைவர் இரா. சம்பந்தன். இந்தநிலையில், நேற்றிரவு அவரது வீட்டில் இருந்தபோது உடல் நிலை திடீரென மோசமடைந்தது.

அதனையடுத்து அவசர அவசரமாக கொழும்பில் உள்ள லங்கா மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் அங்கு உயிரிழந்துவிட்டாரென மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இரா.சம்பந்தரின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றில் அஞ்ச லிக்காக வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் நாடாளுமன்றிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னரே அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சம்பந்தரது பூதவுடல் அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்படவுள்ள இடங்கள் மற்றும் ஏனைய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சம்பந்தர் - சிறு வரலாற்றுக்குறிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி என்பவற்றின் முன்னாள் தலைவரான இரா.சம்பந்தன் மிகநீண்ட - நெடிய அரசியல் வரலாற்றைக் கொண்டவர்.

தமிழ்மக்களின் உரிமைக்காக அரசியல் ரீதியாக சுமார் 70 வருடங்கள் போராடியவர் இரா.சம்பந்தன்.

6 தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.சம்பந்தன் 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 3 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இரா.சம்பந்தனின் தந்தையாரான ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர்.

இரா. சம்பந்தன், யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, மொரட்டுவ புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.

லீலாதேவி என்பவரைத் தனது வாழ்க்கைத்துணையாக்கிய சம்பந்தருக்கு, சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக அரசியல் ரீதியாகப் போராடுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால், தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 20 வருடங்களுக்கும் மேலாகப் பதவி வகித்த சம்பந்தர், இறுதிவரை தமிழ்த் தேசியப் பயணத்தில் தளராது நின்ற ஒரு பழம் பெரும் அரசியல்வாதி.

அத்துடன் சிங்கள அரசியல்வாதிகளும் வியக்கும் வகையிலான அரசியல் அறிவும், அனுபவமும் கொண்டவராகவும் அவர் விளங்கினார்.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான, தொலைநோக்கான பார்வை கொண்டவராகவும் சம்பந்தர் இறுதிவரை செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தரது மறைவு தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தரது மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தமது இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அண்மைய பதிவுகள்