இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை நேற்று(13) இராஜினாமா செய்துள்ளார்.
அவரது பெயருக்கு முன்பாக இடப்பட்ட கலாநிதி பட்டம் குறித்து எழுந்த பெரும் சர்ச்சையை அடுத்தே அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
தற்போதைய சபா நாயகர் அசோக ரன்வல கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதும் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்ட போதும் தன்னை கலாநிதி என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஆனால் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியலில் பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆட்சேபனை எழுந்த சந்தர்ப்பத்தில் அவர் அதனைத் தெளிவுபடுத்த முன்வரவில்லை.
இதனால் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மற்றும் எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனது கலாநிதிப் பட்டம் குறித்து தெளிவுபடுத்தலை வழங்கவேண்டும் எனக் கோரினர்.
இந்த விவகாரம் தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
"கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
எனது கல்வித் தகுதி குறித்து நான் தவறான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
ஆனால் தற்போது அந்த கல்வித் தகைமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து அவற்றைப் பெற வேண்டியிருப்பதாலும், உடனடியாக அந்த ஆவணங்களை விரைவாக சமர்ப்பிப்பது கடினமாகியிருக்கிறது.
எனக்கு பட்டம் வழங்கிய ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து இது சம்பந்தமான கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்கும் இயலுமை என்னிடம் உண்டு.
அவற்றை விரைவில் சமர்ப்பிக்க முடியும் என்று நம்புகிறேன்.
எவ்வாறாயினும், நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்திற்கும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதை இதன்மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். " என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.