யாழ். நாகர்கோவிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலம் புனரமைக்கும் பணி ஆரம்பம்
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புனரமைக்கும் பணியை வட மாகாண ஆளுநர் வேதநாயகம் நேற்று (25) பிற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
நாகர்கோவில் எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959ஆம் ஆண்டில் ஒரு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் மாரிக்காலம் தொடங்கி முடிவடைந்த பின்னர் சில மாதங்களாக இந்த பாதையில் நீர் நிரம்பி நிற்பதனால் இப்பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் இதுவரை காணப்பட்டது.
அண்மைய காலமாக பல தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டும் வன ஜீவராஜிகள் திணைக்களம் அது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று கூறி பல வருடங்களாக இந்த பாலத்தை அமைக்க, தடைகளை ஏற்படுத்தி வந்தது.
இதனால் சுமார் மூன்று ஆண்டுகளாக இப்பாலத்தை புனரமைக்கும் பணிகள் தடைப்பட்டு வந்தது.
நாகர்கோவில் மக்கள் மேற்கொண்ட தொடர் அழுத்தங்கள், முயற்சிகளால் இப்பாலத்தை புனரமைப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் இணங்கியது.
இதனையடுத்து, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தியின் ஏற்பாட்டில் வடமாகாண ஆளுநர் வேதநாயகத்தினால் இப் பாலம் புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வீதியை பயன்படுத்த முடியாத காரணத்தினால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்வதற்கு மருதங்கேணி, புதுக்காடு ஊடாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி மக்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இப் புனரமைப்பு பணி ஆரம்ப செயற்பாட்டின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி, பகுதி கிராம சேவையாளர், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், துறைசார் பொறியியலாளர்கள், கிராம மக்கள் என பலர் இணைந்திருந்தனர்.