பொது வேட்பாளர் தெரிவில் இழுத்தடிக்கும் தமிழரசுக் கட்சி
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இழுத்தடிக்கும் போக்கையே இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்கின்றது.
அந்தக் கட்சியின் மத்திய குழுவில் இந்த விடயம் நேற்று(19) ஆராயப்பட்ட போதும் முடிவு எதையும் எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் பொதுவேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராயும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா இது தொடர்பில் மத்திய குழுவில் முடிவு எடுத்து அறிவிப்பதாக இருவாரகால அவகாசம் கோரியிருந்தார்.
அதற்கு அமைவாக மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கூட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் பொது வேட்பாளர் விடயம் ஆராயப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டோர் அதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் கருத்துத் தெரிவித்த சிறீதரன், சம்பந்தர் சொன்னதைப் போல "ஒஸ்லோ அறிக்கையை எந்த ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொள்கின்றாரோ அவரை ஆதரிக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனை பொதுவேட்பாளரை எதிர்த்த தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் இதை உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றே உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறித்த ஒஸ்லோ அறிக்கையில் தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும் புலிகளும் ஆராய்வர் என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.