22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது.

1 month ago



22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது.

இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒவ்வொரு ஆதரவாளரின் வெற்றியாகும் என மீண்டும்  நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஒன்று திரண்டு, வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து மகிழ்சி தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் -

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் தனித்துவமாக போட்டியிட்டு சிறந்த மூன்று வேட்பாளர்கள் அமோகமான வெற்றி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தமிழரசுகட்சி ஓர் ஆசனத்தில் இருந்து இன்று 3 ஆசனங்களைப் பெற்று எங்கள் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளோம்.

அதேவேளை 22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒவ்வொரு ஆதரவாளனின் வெற்றியாகத்தான் பார்க்கின்றேன்.

அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்.

இது ஆரம்பம் மட்டும்தான்.

வடக்கு கிழக்கிலே இம்முறை இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாக தெரிவாகியுள்ளது.

5 தேர்தல் மாவட்டத்தில் ஆசனம் கிடைத்த ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி, அந்த வகையில் தொடர்ச்சியாக தமிழரசு கட்சி தமிழ் மக்களின் குரலாக தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இயங்கிக் கொள்ளும்.

தமிழரசு கட்சி மிக முக்கியமாக முன்வைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, மற்றும் தமிழ் மக்கள் மீது நடந்த இனஅழிப்பு தொடர்பாக நீதி வேண்டும்.

அதேவேளை எங்களுடைய நில அபகரிப்பு, காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களுடைய பிரதேசத்தில் அபிவிருத்தி நடக்க வேண்டும்.

இந்த நான்கு விடயங்களுக்கும் முக்கியமாக தமிழரசு கட்சி மக்களோடு மக்களாக நின்று அடுத்து 5 வருடங்களில் உழைக்கும் என்ற செய்தியை மட்டக்களப்பில் இருந்து உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சொல்லி         வைக்கின்றேன் " என்றார்.

நடற்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுகட்சி 96,975 வாக்குளைப் பெற்று மூன்று பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டது.

இதில் இராசமாணிக்கம் சாணக்கியன் 65,458 விருப்பு வாக்குகளையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் 22,773 வாக்குகளையும், வைத்தியர் இளையதம்பி சிறிநாத் 21,202 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரா.சாணக்கியன் 65,468 விருப்பு வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பின் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

இது மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற மிக அதிகூடிய விருப்பு வாக்காகவும் காணப்படுகின்றது.

முன்பு பெற்ற 57,000 வாக்குகளை விட இதுவே அதிகமாகும்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் 22,773 வாக்குகளையே பெற்றுள்ளார்.