ஐனாதிபதி பொதுவேட்பாளர் தெரிவு கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாத விஷப் பரீட்சை - நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த விடயம் கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாத விஷப் பரீட்சை” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்" எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சுமந்திரன் எம்.பி. கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில். இன்றைய காலகட்டத்திலே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு தரப்பினர் என்னோடு வந்து உரையாடியபோது இப்படியாக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றேன் என்று கூறி அவர்களையும் இதில் பங்குகொள்ளுமாறு அழைத்திருந்தேன்.
இது நல்ல விடயம். நிச்சயமாக பொது வெளியிலே பேசப்பட வேண்டிய விடயம் என்று கூறியதுயுடன் தாங்கள் கலந்து கொள்வதாகவும் எனக்கு அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
இதன் பின்னர் அவர்களிடத்தே பேச்சாளர்களாக அழைத்தபோது இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை என்றும், அந்த நேரம் தனக்குப் பொருந்துமோ தெரியாது என்றும் ஒருவர் கூறினார்.
அப்படியானால் சனிக்கிழமை காலை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை உங்களுக்கு வசதியா என்றும், உங்களுக்கு ஏற்ற வசதியான நேரத்தைச் சொல்லுங்கள் என்றும் அவரிடத்தே கேட்ட போது. தான் ஒரு குழுவைச் சார்ந்தவன் எனவும், அந்தக் குழு இந்த நிகழ்வுக்குப் போகக் கூடாது எனத் தீர்மானமொன்றை எடுத்திருக்கின்றது எனவும், ஆகையால் இதற்குத் தன்னால் வரமுடியாது என்று கூறினார்.
அந்தக் குறுஞ்செய்தி என்னுடைய தொலைபேசியில் இப்பவும் இருக்கின்றது. என்னிடம் வந்த அந்தக் கூட்டத்திலே ஏழு, எட்டுப் பேர் இருந்தவர்கள்.
அவர்கள் எல்லோருமே இது நல்ல விடயம் என்று சொன்னவர்கள் என்பதால் ஒருவர்தானே வரமுடியாது என கூறியிருக்கின்றார் என்ற காரணத்தால் இன்னுமொருவரிடத்தே கேட்டேன்.
அவர் சொன்னார் இந்த நிகழ்வுக்குப் போகக்கூடாது என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றது என்றும், ஆனால் உங்களுடைய முயற்சி நல்ல முயற்சி என்றும், திரும்ப ஒரு தடவை அவர்களிடத்தே கேட்டுப் போட்டு சொல்வதாகவும் கூறினார்.
அப்படி கேட்டுப் போட்டு இரண்டுநாள் கழித்து தன்னால் இதற்கு வர முடியவில்லை என்று அவர் கூறினார்.
இதன் பின்னர் அந்தக் கூட்டத்திலே பங்குபற்றாமல் இருந்த இன்னும் இரண்டு பேரிடத்தே கேட்டிருந்தேன். அதில் ஒருவர் இதைப் பற்றியெல்லாம் பிரபலமாக எழுதுகின்ற பத்தி எழுத்தாளர்.
அவர் சொன்னார் நீங்கள் செய்கின்ற இந்த விடயம் நல்லது. ஆனால், தானும் அந்தக் குழுவைச் சேர்ந்தவன். ஆகையினால் தன்னாலும் இதற்கு வர முடியாது என்று கூறினார்.
சரி பரவாயில்லை. அந்தக் குழுவைச் சேராத அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடத்தே கேட்டிருந்தேன்.
உண்மையில் இந்தக் கூட்டம் கடந்த மே 26 ஆம் திகதி நடைபெற இருந்தது. அதற்கு அவர் வருவதை உறுதி செய்திருந்தார்.
இந்த நிகழ்வை ஜூன் 9 ஆம் திகதிக்கு மாற்றிய போதும் அவர் வருவதை உறுதி செய்திருந்தார். ஆனால், இன்றைய நேரத்தை அவருக்கு அறிவித்த போது எனக்கொரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்.
அதாவது தங்களுடைய கட்சியின் அரசியல் குழு நாளை காலை கூடுகின்றது என்றும், அதற்குப் பிறகு உங்களுக்குச் சொல்லுகின்றேன் என்றும் அவர் அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இரண்டு நாள் பின்னர் "மன்னித் துக்கொள்ளுங்கள். என்னால் வர முடியாது" என்று அவர் கூறினார்.
இதில் ஒருவருடைய பெயரையும் நான் சொல்லவில்லை அது ஏனென்றால் நாகரிகம் கருதி அதனை நான் செய்யவில்லை. ஆகவே, இதில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்.
இப்படி இவர்கள் ஒளித்து ஓடுவதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.
கருத்துக்கள் இருந்தால் அந்தக் கருத்துக்களை மக்கள்முன் வைப்பதுதான் ஐனநாயகம். கருத்துக்களை கருத்துக்களால் மோத வேண்டும்.
கருத்துச் சொல்லுவதற்கு சுதந்திரம் இல்லை என்று சொன்னால் அது பாசீசவாதம். எதையும் சரியான விதத்திலே அடையாளம் காண வேண்டும்.
அப்படி ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி மக்களோடு சேர்ந்து பகிர்ந்து உரையாற்றுவோம் என்று சொல்லுகின்ற போது அதை முன்கொண்டு செல்வதற்காக இருக்கின்றவர்கள் ஏன் தங்களைப் பாசீசவாதிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளுகின்றார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
ஆகவே, அவர்களைப் பற்றி கதைத்து இந்த நேரத்தை வீணாக்கக் கூடாது.
பொது நிலைப்பாடும் பொதுவாக்கெடுப்பும் என்று சொல்லி 2024 ஆம் ஆண்டு நாங்கள் பேசத் தொடங்கவில்லை.
கடந்த 1951 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டிலே பொது வாக்கெடுப்பு என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நான் இப்ப செல்லுகின்ற இடமெல்லாம் இந்தப் புத்தகத்தைக் கொண்டு திரிகின்றேன். இதுதான் எங்கள் கட்சியின் உத்தியோக பூர்வ பிரசுரிப்பு ஆகும். அதில் பல விடயங்கள் இருக்கின்றன.
இங்கு பல்வேறு விடயங்களைப் பலரும் பேசியிருப்பதால் இதனை மக்கள் பகுத்தறிந்து தீர்மானம் எடுக்க போதுமானதாக இருக்கின்றது.
ஆனால், சில சரித்திர விடயங்களைச் சொல்ல வேண்டும். அந்தச் சரித்திரங்கள் இந்தப் பிரசுரிப்பில் முழுவதுமாக இருக்கின்றது.
நாங்கள் ஒரு மக்களாக எங்கள் மக்களின் ஆணை 70 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக ஒரு சமஷ்டி அடிப்படையிலான ஒரு அதிகாரப் பகிர்வுக்கானது என்பதை இனியும் நிறுவத் தேவையில்லை.
அது நிறுவியாயிற்று. இப்ப தொடங்கியுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் ஒரு விஷப் பரீட்சை என்று நான் கூறுகின்றேன்.
ஒரு விசப் பரீட்சையில் நாங்கள் ஈடுபட்டு அசைக்க முடியாத இந்த மக்கள் ஆணையை இல்லை என்று நிறுவுவதற்கு நாங்கள் முயற்சி செய்கின்றோமா அப்பணி ஒரு ஆணை இல்லை என்று காண்பிப்பதற்குத் துடியாகத் துடிக்கின்றோமா தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களாக அந்த விஷப் பரீட்சைக்கு நாங்கள் செல்லவே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்தாகும்.
ஏனென்றால் அதற்கான பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
இது ஒரு பொது வாக்கெடுப்பு அல்ல. இது சமஷ்டிக்கான வாக்கெடுப்பும் அல்ல. இது வேற விடயம்.
தேர்தலில் வாக்களிக்கப் போகின்றவர்களுக்கு இந்த நாட்டின் ஐனாதிபதியாக யார் வரப் போகின்றனர் என்பதால் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும்.
அவர் அந்தக் கருத்துக்குத் தான் வாக்களித்துவிட்டு வருவார். இன்னொரு செய்தியைச் சொல்லுவதற்காக அல்ல. ஆகவே தேவையில்லாத அதுவும் ஒரு உதவாத விஷப் பரீட்சை. எங்கள் இருப்பையே இல்லாமல் செய்யப் போகின்ற ஒரு நிகழ்வு.
இதற்கு நாங்கள் இணங்கினால் இதுவரைகாலம் வரைக்கும் எங்கள் உயிர் மூச்சு என்று சொல்லுகின்ற எங்கள் இறைமை, எங்களுக்கான சுயநிர்ணய உரிமை அனைத்தையும் இல்லை என்று நாங்கள் சொல்லுகின்றதான ஒரு செயற்பாடாகத்தான் இது இருக்கும்.
தேர்தல் என்பது அரசியல் செயற்பாடு. அத்தகைய அரசியல் செயற்பாட்டை அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். இதில் சிவில் சமூகத்துக்குப் பொறுப்பு இருக்கின்றது.
அவர்கள் ஆலோசனை சொல்லலாம். அவர்களுடைய ஆலோசனை வரவேற் கத்தக்கது. ஆனால், இது ஒரு அரசியல் நிகழ்ச்சி, அந்த அரசியல் நிகழ்ச்சிக்காக மக்கள் சிவில் சமூகத்தினரைத் தெரிவு செய்து அனுப்பவில்லை.
எங்களைத்தான் தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்கள் ஆணை எங்களுக்குத்தான் இருக்கின்றது. அந்தத் தீர்மானங்கள் எடுக்கின்ற பொறுப்பு எங்களுடைய கைகளில்தான் இருக்கின்றது.
அதனை நாங்கள் விட்டுவிட முடியாது. அப்படி விட்டுவிட்டால் எங்களுடைய பொறுப்பை நாங்கள் உதாசீனம் செய்தவர்களாவோம்.
எங்களுடைய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதான இந்தச் செயலுக்கு நாங்கள் எந்த வகையிலும் இடங்கொடுக்கக் கூடாது.
அதையும் மீறி என்னமாதிரியான தீர்மானம் வரப்போகின்றது என சுவரிலேயே எழுதப்பட்டிருக்கின்றது. அந்தப் புள்ளி விபரங்கள் இருக்கின்றன. அனைத்து தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள மக்கள் வாக்களித்தாலும் 20 வீத்த்தைத் தொடாது.
வேண்டுமானால் வேறொரு சந்தர்ப்பத்தில் இதனை புள்ளிவிபரத்தோடு காண்பிக்கின்றேன். அப்படி எழுதப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு இல்லை.
நாங்கள் அதைத் தான் நிறுவப் போகின்றோம் என்று ஒற்றைக் காலில் எவராவது நிற்கின்றார்களா இருந்தால் அதற்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாங்கள் அதில் இருந்து ஒளித்தோடப் போவதுமில்லை.
அதற்காக உடனடியாகத் துரோகிப் பட்டம் கட்டிவிடுவார்கள். இப்ப துரோகிப் பட்டம் கட்டுவது மிக இலகு. அதற்கு இன்றைக்குப் பெறுமதியே இல்லாமல் போய்விட்டது.
அவ்வாறு கட்டுவதானால் கட்டுங்கள். எதைச் செய்தாலும் பரவாயில்லலை, ஆனால், எங்களுடைய மக்களின் இறைமையில் இருந்து உருவாகின்ற அந்த உரித்தை
விட்டுக்கொடுப்பதற்கு இப்படியாக விலை பேசி விடுவதற்கு நாங்கள் இணங்கப்போவதில்லை. இறுதிவரை இணங்கப்போவதில்லை.
சரி ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தினாலும் கூட நான் சொல்லுகின்றேன் அதற்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும் என்று. அது ஏன் என்று கேட்டால் அவர் படுதோல்வி அடைகின்றபோது இது எங்களுடைய அரசியல் நிலைப்பாடு அல்ல, அது யாரோ செய்கின்ற கோமாளிக் கூத்து என்று நாங்கள் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.
இது பிரதானமான தமிழ்க்கட்சி ஒன்றைச் சார்ந்தவன் என்ற வகையில் நான் சொல்லுகின்றேன். எங்கள் கட்சியினருக்கும்தான்.
இதற்கு எதிராக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு எங்களிடத்தே இருக்கின்றது.
துரோகி என்று சொல்லி விடுவார்கள் என்று யாரும் பயந்து ஒளித்து ஓட வேண்டாம். தயவுசெய்து அதனைச் செய்யாதீர்கள்.
மக்கள் நலனுக்காக எங்களுடைய இருப்புக்காக காலாகாலமாக அடிப்படையிலே இதை எடுத்து இயம்பிய கட்சி என்ற காரணத்தினாலே இந்த நிலைபாட்டில் உறுதியாக இருக்கிற காரணத்தினாலே இதை இல்லாமல் செய்கின்ற எந்தச் செயற்பாட்டுக்கும் எதிராக முழு மூச்சோடு நாங்கள் இயங்க வேண்டும்." என்றார்.
இந்த நிகழ்வின் இறுதியில் மீண்டும் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி., "இந்த நிகழ்வுக்கு எல்லாப் பேச்சாளர்களிடத்திலேயும் நான்தான் பேசி அவர்களை அழைத்து இருந்தேன்.
இந்த நிகழ்ச்சி சரியாக நடைபெற வேண்டுமாக இருந்தால் எல்லாப் பக்கக் கருத்துக்களும் சரியாக வெளிவர வேண்டும் என்பதால் இங்கே வந்து கருத்துக்களைச் சொன்ன தற்கு நன்றி.
பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஒருவரைக் குறிப்பிட்டுச் சொன்னார் அவர் ரவிகரன் என்று. ஆகவே அப்படியாக எங்களுடைய நிலங்களை பாதுகாப்பதற்காக முன்னணியில் நிற்கின்றவர்கள். என்னுடைய கருத்து இந்த விடயங்கள் சம்பந்தமாக ஒரு கருத்துருவாக்கம் வர வேண்டும் என்பதுதான்.
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் தான் வரவிருக்கின்றது. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.
ஆனபடியால் மக்கள் இந்த நிலைப்பாட்டை அறிந்து தங்களுடைய மனங்களிலே என்னென்ன இருக்கின்றன என்பதைக் கூறவேண்டும்.
சிறீகாந்தா சொன்னது போல் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டோமா இதை விட்டா இனி சந்தர்ப்பம் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டோமா, அப்படி இல்லை என்றால் 70 வருடங்களாக இதைத் தானே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இந்த முறை சொன்னால் பின்னர் அடுத்த முறை என்ன நடக்கப் போகின்றது என்றதொரு ஒரு கேள்வி இருக்கின்றது.
இங்கு பேராசிரியர் சர்வேஸ்வரன் பேசுகின்றபோது இந்து முறை பொது வேட்பாளர் என்றால் அடுத்த முறை என்ன செய்யப் போகின்றோம்.
அடுத்த முறையும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப் போகின்றோமா என்று கேட்டார். அதைவிட பிரதானமான ஒரு கேள்வி இருக்கின்றது.
நாங்கள் பலர் சொன்ன கேள்வி என்னவென்றால் பொது வேட்பாளர் விடயத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்றால் அதாவது இதில் தோல்விதான் என்பது வாக்களிப்பு வீதத்தில் வடிவாகத் தெரியும்.
நாங்களே எங்களுக்குச் சொந்தக் காசில் சூனியம் வைப்பது போல் ஏன் அப்படிச் செய்ய வேண்டும். இதனையும் மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இன்றைக்கு எவருமே சவாலுக்கு உட்படுத்தாத எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை நாங்களே கொண்டு போய் வெட்டிப் புதைக்கப் போகின்றோமா? அது ஒரு புத்திசாலித்தனமான விடயமா? இன்றைக்கு இருக்கின்ற நிலைப்பாட்டிலே 2010 ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தல் வந்தபோதும் ஒரு தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தும் வந்தது. இது சம்பந்தமாக சம்பந்தனையும் கேட்டார்கள்.
அப்படி 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் இந்தக் கருத்து வந்தது. அதே போல் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் இப்போது இருக்கின்ற சில சிவில் சமூகத் தலைவர்கள் போல் அன்றைக்கு சமயத் தலைவர்கள் கூட்டாக வந்து நீங்கள் தமிழ் வேட்பாளராக நில்லுங்கள் என்று சம்பந்தனிடம் கேட்டார்கள். அதனை அடியோடு சம்பந்தன் மறுத்துவிட்டார்.
போர் முடிந்தவுடன் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கின்றபோது கூட வாக்களித்தார்கள்.
அதன் பின்னர் மூன்று மாதங்களில் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்குக் கிடைத்த போரில் தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு இரண்டு மடங்கு கொடுத்தார்கள்.
அடுத்த தடவை நாங்கள் ஒரு நிலைப் பாட்டை எடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள்.
அதனை நாங்கள் சொன்னதால்தான் என்று இப்ப சொல்ல வரவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்து வாக்களித்திருந்தார்கள்.
இந்த இடத்தில் மைத்திரிக்கு வாக்களித்தமையால் என்ன நடந்தது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால், அதில் ஆனது என்னவென்று எங்களில் பலருக்குத் தெரியும். ஆனால் முடிவு ஒன்றும் பெறவில்லையே தவிர நடந்த பல விடயங்கள் பலருக்குத் தெரியும்.
இதில் விசேடமாக எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது ஒரு பெரிய விடயம். அந்தக் காலகட்டத்தில் எங்கெங்கு எவ்வளவு விடுவிக்கப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதனைச் சொல்லி நான் நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை.
அந்தக் காலகட்டத்தில்தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது.
எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது. அப்படி காணி விடுவிப்பு பெரியளவில் நடந்தது.
அதேபோன்று ஒரு புதிய அரசமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால், அது நிறைவு பெறவில்லை என்பது உண்மை. ஆனால், எதுவும் நடக்கவில்லை என்று எவரும் சொல்லமுடியாது.
அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள். அதிலும் சில பிரதேசங்களில் எங்களுடைய மக்கள் 83 வீதம் சஜித் பிரேமதாஸவுக்குத் தமது வாக்குகளை அளித்திருக்கின்றார்கள்.
ஆனால், இந்தத் தடவை அப்படியான ஒரு சந்தர்ப்பம் இல்லை. அது எப்படியான எந்தத் தடவை என்றால் அந்த மூன்று தேர்தலிலும் அடுத்த பக்கத்தில் நின்றது ஒரு ராஜபக்ஷவினர்தான்.
அப்படி அடுத்த பக்கத்தில் ராஜபக்ஷவினர் ஒருவர் நின்றால் எங்களுடைய மக்கள் ஒன்றுதிரண்டு ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றொரு தரப்பினருக்கு வாக்களித்து இருக்கின்றார்கள்.
ஆனால், துரதிஷ்டவசமாக இந்த முறை ஒரு ராஜபக்ஷக்களும் இல்லை. ஆனபடியால் தமிழ் வாக்குகளை ஒன்றாக வைத்திருப்பது கொஞ்சம் கஷ்டமான விடயம்தான்.
அது ஏன் என்று சொன்னால் நாங்கள் இந்தப் பிரதான வேட்பாளர்கள் என்று சொல்கின்ற அந்தப் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் சஜித் பிரேமதாஸ, அவருக்கு கடந்த தேர்தலில் எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.
கடந்த மூன்று தடவைகளும் வெவ்வேறு வேட்பாளர்களை நிறுத்தினவர் ரணில் விக்கிரமசிங்கதான். அதில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேனா. சஜித் பிரேமதாஸ என்று இந்த மூன்று பேரையும் ரணில் விக்கிரமசிங்கவே நிறுத்தி இருந்தார்.
சென்ற ஆட்சிக் காலத்தில் மைத்திரி பால சிறிசேன ஆட்சிக்கு ஆதரவாக எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு எங்களோடு சேர்ந்து இயங்கியது ஜே.வி.பி. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாங்கள் வைத்துக்கொண்டு பிரதம கொறடா பதவியை அவர்களுக்குக் கொடுத்து நாங்கள் ஒன்றாகத்தான் செயற்பட்டு வந்திருந்தோம்.
அப்போது நாங்கள் இரண்டு கட்சிகளும்தான் அரசோடு சேராமல் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவு கொடுத்திருந்தோம்.
குறிப்பாக அரசமைப்பு உருவாக்க அந்தச் சபைக்கு எங்களோடு இணைந்து ஆதரவையும் அவர்கள் கொடுத்திருந்தார்கள்.
இந்த மூன்று பேரும் இப்ப தேர்தலில் நிற்கின்றபோது தமிழ் மக்களுடைய வாக்குகளை ஒரு நிலைப்பாடாகக் கொண்டு வருவது எப்படி என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.
உண்மையைச் சொன்னால் எனக்கு என்னுடைய மனதில் இன்னமும் எந்தத் தீர்மானமும் இல்லை. அது நாங்களும் பேசி அவர்களோடும் பேசி எடுக்க வேண்டிய தீர்மானமாக இருக்கின்றது.
ஆனால், இதில் ஒன்றை நிச்சயமாகச் சொல்லலாம். அதாவது கடந்த மூன்று தேர்தல்களிலும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் இருந்தபோது அதில் ஒரு தடவை எங்களுடைய வாக்குகள் வெற்றியாளரைத் தீர்மானித்தது.
ஆனால், இப்போது மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றபோது எங்களுடைய வாக்குகள் தான் நிச்சயமாக வெற்றியாளரைத் தீர்மா னிக்கும்.
அதற்கு எங்களுடைய வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வாக்கு சிதறப்படக்கூடாது. அதற்கான மூலோபாயங்களை நாங்கள் வகுக்க வேண்டும்.
நாங்கள் அனைவரோடும் பேச்சு நடத்துகின்றோம். அடுத்தடுத்த நாட்களிலே நீங்கள் அதனைக் காண்பீர்கள். ரணில் விக்கிரமசிங்க இன்னமும் தன்னை வேட்பாளராக அறிவிக்காத காரணத்தால் அவரோடு இன்னமும் பேச்சு நடக்கவில்லை.
மற்றைய இருவரும் பேசுவதற்குக் கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு பேசுவோம். ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கமிடம் நாங்கள் ஒரு விடயத்தைக் கேட்கின்றோம்.
அதாவது நீங்கள் இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற காரணத்தினால் தேர்தலுக்கு முதல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றதால் அதனைச் செய்யுங்கள். அப்படி முதலில் அதனைச் செய்து காண்பியுங்கள் என்றுதான் அவரிடம் கேட்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறை வேற்றுகின்றது இருக்கட்டும். நிறை வேற்று அதிகாரத்தைக் கொண்டு செய்கின்ற விடயத்தை முதலில் செய்து காட்டுங்கள்.
அப்படி நீங்கள் செய்து காட்டினால் நாங்கள் அடுத்த கட்டத் தைப் பற்றி சிந்திக்கலாம். இப்படியாக சில நிலைப்பாடுகளை பற்றி நாங்கள் முடிவுகளையும் எடுக்கலாம்.
இங்கு மாகாண சபையை பற்றி சொல்லப்பட்டது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு மாகாண சபை தொடர்பில் தனி நபர் சட்டமூலமொன்றை நான் கொண்டு வந்திருந்தேன்.
அப்படி திரும்பவும் இந்த நாடாளுமன்றத்திலும் ஒரு தனி நபர் சட்டமூலமும் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அது உயர்நீதிமன்றம் வரை சென்று கூட சாதாரண பெரும்பான்மையோடு அதை நிறை வேற்றலாம் என்று உயர்நீதிமன்றமே சொல்லியிருக்கின்றது.
ஆகவே, அதை எடுத்து நிறைவேற்றச் சொல்லிக் கேட்போம். அவர் அதனைச் செய்யலாம். அவரிடத்தில் அந்த வாக்குறுதிகளைக் கேட்போம்.
இப்ப என்னுடைய சொந்தக் கருத்து என்னவென்றால் இந்தத் தடவை தமிழ் மக்கள் விடயத்தில் தங்களது நிலைப்பாடுகள் என்ன என்பதை தெளிவாக சிங்கள மக்களுக்கு மூவரையும் சொல்ல வைக்க வேண்டும்.
இதைத்தான் நாங்கள் தமிழ் மக்கள் விடயத்திலே சொல்லப் போகின்றோம். செய்யப் போகின்றோம் என்பதை சிங்கள மக்களுக்கு நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதை நாங்கள் ஒரு நிபந்தனையாகக் கூட வைக்கலாம்.
ஏனென்றால் எங்களுடைய வாக்குகள் ஒருமித்து இருக்குமேயானால் அந்த வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.
ஆகையினாலே எங்களுடைய பேரம் பேசுகின்ற சக்தி மிக அதிகமாக இருக் கின்ற இந்த வேளையிலே அந்த ஜனநாயக சூழலிலே இப்ப ஆயுதம் இல்லாத ஒரு சூழல்.
ஆயுதம் இருந்தால் அது வேறொரு சூழல். ஐயா சொன்னதைப் போல் வேட்டு இல்லை வோட்டு எண்ணிக்கையில் குறைவாக வாக்கு இருக்கின்ற மக்களுடைய வாக்குதான் முடிவைத் தீர்மானிக்கும் என்று இருந்தால் அது எண்ணிக்கையில் குறைந்தவாக்காக அது கருதப்படாது.
எங்களுடைய வாக்கு பலம் 80 வீதமாகக் கூட விஸ்வரூபம் எடுக்கும்.
ஏனென்றால் நாங்கள்தான் தீரமானிக்கின்ற சக்தியாக இருப்போம்.
அப்படியான சந்தர்ப்பங்கள் வருவது அரிது. ஆகவே, இதனை சமஜோஷித்தித்து மூன்று வேட்பாளரை குறைந்த பட்சம் ஒரு தீர்வுக்காக செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் அவர்களில் யாரும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களை எதிர்க்காமல் பண்ணலாம். அப்படியான மூலோபாயங்களை நாங்கள் வகுத்து அவர்களோடு மிகக் கடினமான முறையிலே பேச்சு நடத்தி எங்களுடைய வாக்குகளை ஒருமித்து வைத்து நாங்கள் இந்தத் தேர்தலை சந்திப்பது நல்லது என்பது என்னுடைய சிந்தனை.
வாக்குகளைப் பகிஷ்கரிப்பதும் அதே செய்திக்காக இவர்களாலே பிரயோசனம் இல்லை என்று சொல்லுகின்ற செய்திக்காக வேறு ஒருவருக்கு வாக்களிப்பது என்பதும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.
ஏற்கனவே 2005 இல் பகிஷ்கரித்தும் நாங்கள் பார்த்திருந்தோம். அதன் விளைவுகளையும் சந்தித்திருந்தோம்.
ஆகையினால் இந்த வாக்கைப் பிரயோசனமான முறையிலே நாங்கள் ஒரு ஜனநாயக சூழலிலே மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கின்ற போது நாங்கள் தீர்மானிக்கின்ற சக்தியாக எங்களுடைய வாக்கைத் திரட்ட முடியும் என்றால் அது எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும்.
அதை நாங்கள் செய்வது நல்லது என்ற என்னுடைய கருத்தையும் இறுதியாகச் சொல்லி வைக்கின்றேன்.
இப்படியாக இதுபோன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தும் கலந்துரையாடல்களை பல இடங்களிலும் நடத்தப்பட வேண்டும். இப்போது வவுனியாவிலும், மன்னாரிலும், கிழக்கு மாகாணத்திலும் இந்தக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கின்றது.
என்னைப் பொருத்தவரையில் இப்படியாகப் பேசுவது நல்லது.
இந்த விடயங்களைப் பகிரங்கமாக மக்களோடு சேர்ந்து பேசுவது நல்லது என்பதுடன் மிகவும் ஆரோக்கியமானது. அதைத் தவிர்க்கின்றவர்கள் தவிர்க்கலாம்.
ஆனால், மக்களுக்கு ஆர்வம் இருக்கின்றது என்று இன்றைக்குத் திரளாக வந்த உங்களுடைய வருகை எங்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கின்றது. ஆகவே, இவ்வாறு வந்து கலந்துகொண்டிருந்த அனைவருக்கும் மிக்க நன்றி."-என்றார்.