ஈழத்து சினிமா மக்களின் வலிகளை சொல்லுவதாக அமைய வேண்டும். வலிகளை சொல்லுவதாக தெரிவித்து மக்களை மேலும் வலிகளுக்குள் ஆளாக்காதீர்கள். ஈழத்து வலிகளை படமாக எடுக்கும் போது அதனை சரியாகச் செய்யுங்கள்.
படம் எடுக்கிறம் என்று பில்டப் காட்டிவிட்டு தமிழ் மக்களின் வலிகளை வலி கொடுத்தவர்களுக்கும் இருக்கிறது என்று நிரூபிக்கப் பார்க்காதீர்கள். வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
போரின் பின்னர் பிறந்த சந்ததியினருக்கு வரலாற்றை திரிவுபடுத்தி காட்சிகளை எடுக்காதீர்கள்.
வலிகளை கொடுத்தவர்களை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளுடன் ஒப்பிடாதீர்கள்.
போதைப்பொருள் பாவனை சம்பந்தமாக படம் எடுப்பது என்றால் அதை மட்டும் எடுங்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலிகளை அதற்குள் சேர்த்து காட்சியமைப்புகளைச் செய்து அசிங்கப்படுத்தாதீர்கள்.
படம் எடுப்பதற்காக கதைகள் உள்ள இடத்துக்குச் சென்று அந்த மக்களுடன் வாழ்ந்து படத்தை எடுக்கும் தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் போல் இந்த மண்ணில் படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு அந்த வேலை கிடையாது.
ஈழ மண்ணில் வலிகள் நிறைந்த கதைகள் தீர்வின்றி கொட்டிக்கிறது.
ஈழ மண்ணில் படம் எடுக்க வெளிக்கிடும் இளம் ஈழ இயக்குநர்கள் வலிகள் நிறைந்த மண்ணில் வாழ்கிறார்கள்.
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கற்பனைக் கதையையே உணர்வாக எடுக்கும் தமிழ்நாட்டு சினிமா இயக்குநர்கள் மத்தியில் உண்மைக் கதைகள் உள்ள நிலம் பற்றி கதை எடுக்க இந்தக் காலத்து ஈழ இயக்குநர்களால் முடியவில்லை.
போர்க் காலங்களில் தரமான படங்களை எடுத்தார்கள். உணர்வாகவும் இருந்தது எழுச்சியாகவும் இருந்தது.
தொழிற்நுட்ப வசதியில்லாத காலத்தில் தரமான படங்களை எடுத்தார்கள். தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய காலப்பகுதியில் வலிகளை சரியாக சொல்லத் தெரியவில்லை.
அரச படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான காலப் பகுதியில் தமிழ்நாட்டில் இருந்து வரும் இயக்குநர்கள் தெரிவிக்கும் போது தொழில்நுட்பத்தை நாங்கள் சொல்லித்தரலாம் படத்தை நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
ஏனெனில் இந்த மண் தொடர்பாக உங்களிடம் தான் கதை இருக்கிறது. அதை உணர்வு பூர்வமாக எங்களால் எடுக்க முடியாது உங்களால் தான் முடியும் என்றார்கள்.
வலிகளோடு தீர்வின்றி இருக்கும் தமிழ் மக்களின் கதைகளை படமாக எடுக்கும் போது மண்ணில் நடந்த கெட்ட சம்பவங்களை எடுத்து தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
மணிரத்தினம் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் காட்சி அமைப்புகள் அனைத்தும் ஈழ தமிழ் மக்களுக்கு எதிரானவை என்பது தெரியாத தமிழ்நாடு கும்பிடிப்பூண்டி ஈழ அகதி முகாம் மக்கள் சென்னை மவுண் றோட்டில் மணிரத்தினத்துக்கு எமது கதையை சிறப்பாக எடுத்தீர்கள் என்று வாழ்த்து தெரிவித்து நோட்டீஸ் ஒட்டினர்.
மனிரத்தினம் போல் ஈழ இளம் இயக்குநர்கள் படம் எடுக்க வெளிக்கிடாதீர்கள். படத்தின் காட்சியமைப்புகள் முக்கியம்.
யாழ்.திரையரங்கில் கைதட்டல் கூடுதலாக இருக்கும் காட்சியமைப்புகளைப் பார்த்தால் வெட்கக்கேடாக இருக்கிறது.
நல்ல பார்வையுள்ள தமிழ் சமூகத்தை திசைதிருப்பி விடாதீர்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், போரில் இடப்பெயர்வு வாழ்வு, அரசியல் கைதிகள் விடய கதைகளை படமாக எடுக்கும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் படங்களை எடுங்கள், மேலும் வலிகளை கொடுக்காதீர்கள்.
தமிழ் மக்களுக்கு வலிகளை கொடுத்தவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களில் படங்களுடன் சேர்த்து வைப்பது கவலை தரும் விடயமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டது இவர்களால் என்று ஜ.நா வரையும் பேசப்படும் போது அந்தப் பேச்சை உங்களுடைய படம் இல்லாமல் செய்யுமா ?
யாழ்.திரையரங்கில் எங்களின் படம் என்று பார்ப்பம் என்று போய் பார்த்துவிட்டு விசனத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறுகிறேன்.