வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கூட்டுறவு பயிற்சி கல்லூரியைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் -- இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கோரிக்கை

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கூட்டுறவு பயிற்சி கல்லூரியைத் திறந்து வைத்து இயங்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளவை வருமாறு.
வடக்குக் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராகிய எஸ்.வேலாயுதம் பிள்ளையின் ஏற்பாட்டில் அன்றைய ஆரம்ப மாகாணக் கூட்டுறவுத் திணைக்களத்தில் அலுவலர்களாகக் கடமையாற்றிய க.பஞ்சலிங்கம், எஸ்.சிவராஜா, சி.கோணேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்புடன் கூட்டுறவு பயிற்சி கல்லூரியானது திருகோணமலையில் 1989 ஆம் ஆண்டு 'டொக்கியாட்' வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியின் முதலாவது அதிபராக எஸ்.கோபாலசிங்கம் கடமையாற்றியிருந்தார்.
அதன் பின்னர் 1990 மே மாதத்தில் கூட்டுறவு பயிற்சி கல்லூரியானது தனியார் இல்லத்திலிருந்து திருகோணமலை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் இயங்கும் சிறு கைத்தொழில் திணைக்களத்தின் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வந்தது.
1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வவுனியாவில் இந்தக் கல்லூரியை நிரந்தரமான கட்டடத்தில் நிறுவுவதற்கென காணி வவுனியா பூந்தோட்டத்தில் மாகாண சபையால் ஒதுக்கப்பட்டு கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி நிறுவப்பட்டு, 2001 இல் புதிய கட்டடம் வடக்குக் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஜீ.கிருஷ்ணமூர்த்தியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அதுபோலவே இந்தக் கல்லூரிக்கான ஆண்கள் விடுதி, அலுவலர்களுக்கான விடுதி ஆகியன 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன.
கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி என்பது வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் நடத்துவற்கான ஒரே ஒரு பயற்சி கல்லூரியாகும்.
கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்வதற்குக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறிகள் அடிப்படை வசதிகளற்ற இடங்களில் நடத்தப்படுகின்றது.
பூந்தோட்டதில் உள்ள கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் அனைத்து வசதிகளும் உள்ள போதும் அது பயன்பாடு இல்லாமல் உள்ளது.
கூட்டுறவுச் சங்கப் பரிசோதகர்கள், கூட்டுறவு பணியாளர்கள், மாணவர்கள் என்று பலதரப்பினருக்கு பயிற்சிகளை வழங்கி வந்த அந்த பயிற்சி கல்லூரியானது மாகாண சபை ஊடகக் கூட்டுறவு துறையிடம் வழங்குமாறு கடந்த காலங்களில் இடம்பெற்ற மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளாலும், பொது அமைப்புகளாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
ஆனாலும் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த புதிய ஆட்சியிலாவது கூட்டுறவு பயிற்சி கல்லூரியானது முழுமையாக இயக்க வைக்க வடமாகாணசபையின் ஆளுநர் நடவடிக்கை வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
