தெற்கு அரசியலில் திருப்பம் இந்த மாதத்தில் அமையும்

7 months ago

தெற்கு அரசியலில் முக்கியமான சில திருப்பங்கள் நடைபெறும் மாதமாக இம்மாதம் அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

கொழும்பில் முக்கியமான சில அரசியல் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், இச்சந்திப்புகளின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே பிரதான கட்சிகளின் நகர்வுகள் அமையவுள்ளன எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவாரா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதத்துக்குள் அறிவிக்கவுள்ளார்.

மறுபுறத்தில் மொட்டு யானை கூட்டு தொடருமா அல்லது முறியுமா என்பதும் இம்மாதம் தெரியவரும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 20 எம்.பி.க்களை ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் பிரித்தெடுக்காவிட்டால் மொட்டுக் கட்சி தனியே ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கும் நிலைப்பாட்டில் உள்ளது.

விமல் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் அமைந்துள்ள, சிங்கள தேசியவாத அமைப்புகளும் அங்கம் வகிக்கும் சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரும் இம் மாதம் பெயரிடப்படவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் ரணசிங்க, தயாசிறி ஜயசேகர, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்களும் தாம் எந்தப்பக்கம் நிற்கவேண்டும் என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளனர்.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவும் இம் மாதம் முதல் தமது பிரசார வியூகத்தை மேம்படுத்தவுள்ளன.

இதேவேளை, பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்க்கமான முடிவுகளை ஜூன் மாதத்திலேயே எடுக்கவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்