13ஆவது திருத்தச்சட்டம், தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திடம், தமிழரசுக் கட்சியினர் தெரிவிப்பு

6 months ago

13ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களின் எதிர்பார்ப்பை ஒருபோதும் பூர்த்தி செய்யாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திடம், தமிழரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள சஜித்துக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு, மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே 13ஆவது திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, தான் ஆட்சியமைத்தால் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்துவேன் என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, வழங்கிய அதிகாரங்களை மீளப்பெறும் தன்மையுள்ள 13ஆவது திருத்தம் ஒருபோதும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாது என்று தமிழரசுக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மாகாண சபையின் அதிகாரங்கள் குறித்தும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமை தொடர்பிலும் மாகாணசபை விவகாரங்கள் தொடர்பாகவும் சஜித்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.

அவற்றையும் சஜித் கேட்டறிந்தார், அத்துடன், சஜித்துக்கு வழங்கிய ஆதரவு தொடர்பிலும், சஜித் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்மைய பதிவுகள்