தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் - யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்குத் தீர்வு வழங்கப்படவில்லை. போராட்டத்தால் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான கரிசனை ஏதுமின்றி, பல்கலைக்கழக மருத்துவபீடமொன்றின் திறப்புவிழாவுக்கு ஜனாதிபதி ரணில் வருகின்றமை எமக்குச் செய்யும் துரோகமாகும் இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அமைச்சரவையில் பேசுகின்றோம், திறைசேரியில் பேசுகின்றோம் என்று எமக்குக் கூறப்படுகின்றது.
ஆனால், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, உயர் கல்வி அமைச்சோ எமக்குத் தீர்வை வழங்கவில்லை.
2015 ஆம் ஆண்டிலிருந்து சம்பள நிலுவைப் பிரச்சினை காணப்படுகின்றது. நிதிதான் பிரச்சினை என்றால் எம்முடன் பேசித் தீர்மானிக்கலாம்.
2015 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள 15 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருந்தார் - என்றனர்.