முல்லைத்தீவு தியோநகரில் தனியார் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் செப்டெம்பர் 05ஆம் திகதிக்கு (05.09.2024) வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது..
குறித்த பகுதியில் கடந்த 26ஆம் திகதி (26.05.2024) கரைதுறைப்பற்றுப் பிரதேச சபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை, தனியார் நிறுவனம் ஒன்று அடாவடியாக வேலியிட்டு தடுத்தமையால், அப்பகுதியைச் சேர்ந்ந பொதுமக்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியை தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 20ஆம் திகதி (20.06.2024) அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விவகாரங்களுடன் தொடர்புபட்டுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், தியோகுநகர் கிராம மக்கள் , தனியார் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டவர்களை சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 25ஆம் திகதிக்கு (25.07.2024) திகதியிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து இன்றையதினம் (25.07.2024) குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டதரணிகள் வாதாடி செப்டெம்பர் 05ஆம் திகதிக்கு (05.09.2024) மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்டே தியோநகர் கிராமம் உருவாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்றன.
இவர்களின் வாழ்வாதாரம் கடற்தொழிலாகும். இக்கிராமம் உருவாக்கப்பட்டது தொடக்கம் கடலுக்கு செல்லும் பாதை அக்கிராம மூடாகவே அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ளது.
திடீரென தனியார் நிறுவனம் வந்து தங்களுடைய காணி என உரிமை கோரி மக்கள் குறித்த பாதையூடாக கடற்கரைக்கு செல்லாதவாறு பாதையை மறித்து வைத்ததன் பின்னரே மக்கள் போராடி வீதியை அகற்றியிருந்தார்கள்.
அதனையடுத்து குறித்த கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் விரைந்து அது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என கடிதம் வழங்கியிருந்தார்கள்.
ஆனால் தனியார் நிறுவனத்தினர் மக்கள் மீதும் குறித்த கிராம காணி தமக்கானது எனக்கூறி முறைப்பாடு செய்ததோடு வழக்கினையும் பதிவு செய்திருந்தனர்.
இவ்வழக்கானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , சமூகசேவகர் பீற்றர் இளஞ்செழியன் உட்பட கிராமமக்கள் உட்பட 13 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது