காஸாவில் மனித துயரத்தை வேடிக்கை பார்க்க மாட்டேன்!----அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்-

5 months ago



“தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது. அதே வேளை, காஸாவில் நிலவும் மனிதத் துயரத்தின் வீச்சு பற்றிய எனது அக்கறையை நெதன் யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இதில் நான் அமைதியாக இருக்கப்போவ தில்லை”- இவ்வாறு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து, காஸா பிரச்னையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் பிரச்னை குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இரு தரப்புமே சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது- என்றார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணம் கவனம் பெற்றுள்ளது. நெதன்யாகுவின் வருகையையொட்டி வெள்ளை மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலில் ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார். அப்போது, ஹமாஸ் படையினரால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள், போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எமது உற வினர்கள் நாடு கொண்டுவரப் படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர்.