வவுனியாவில் கடத்திச் சென்றனர் என பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 months ago


கடத்திச் சென்றனர் என பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் இருந்து குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து சாரதி நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா - மன்னார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் சாப்பாடு கொண்டு செல்லப்பட்டது. அந்தச் சாப்பாட்டை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்தபோது வீதியில் நின்ற ஆயுள்வேத பெண் வைத்தியர் ஒருவர் அந்த நோயாளர் காவு வண்டியை மறித்து அதில் ஏறியுள்ளார்.

மேற்படி பெண் வைத்தியரை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிச் சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு. மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கிப் புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவைத் திறந்து கீழே குதித்துள்ளார். இதனால் அந்தப் பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு கூடிய மக்களிடம் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டனர் என பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட மக்கள், சாரதியை நெளுக்குளம் பொலி ஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவரையும் நோயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப் பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளதுடன் முறைப்பாட்டை மீளப்பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நோயாளர் காவு வண்டி சாரதி தனது வீட்டுக்குச் செல்ல வாகனத்தைத் திருப்பியபோதே சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக அதிலிருந்து குதித்தார் என்று வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்