இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணம் வெற்றி பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் இந்தியப் பயணம் வெற்றி பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று வெளியான அந்தச் செய்தியில்- இந்தியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு மிக உயர்ந்த அங்கீகாரம் கிடைத்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுரகுமாரவை அன்புடன் வரவேற்று, அநுரவின் முதுகில் கை வைத்து பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்.
ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து சென்ற எந்தவொரு ஜனாதிபதிக்கும் இராணுவ மரியாதை வழங்கப்படவில்லை.
ஆனால், ஜனாதிபதி அநுரகுமார இந்திய உயர்மட்டத்தில் இருந்து அதே மரியாதைகளைப் பெற்றார்.
மோடியுடனான பேச்சுக்குப் பின் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் இரவு உணவில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார அங்கு உரை நிகழ்த்தினார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அநுரகுமார இந்தியாவின் முன்னணி வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்தார்.
இந்தியப் பிரதமர் மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தனது நாட்டின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார நேரடியாக வெளிப்படுத்தியதும் அவரது இந்திய பயணத்தை வெற்றிகரமான பயணமாக இந்திய ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் எல்லைக்குள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது அரசாங்கம் இடமளிக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார நேரடியாக தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸநாயக்கவின் இந்திய பயணம் ஜே.வி.பியின் அரசியல் மாற்றத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதாக 'த இந்தியன் எக்ஸ்பிரஸ்' சுட்டிக் காட்டியிருந்தது.
"இலங்கையின் தரப்பில் வலுவான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து புதுடில்லியுடனான இராஜதந்திர உறவுகளுக்கு ஜே.வி.பி. யின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மீளப் பெற முடியாத அரசியல் முரண்பாடுகள் கூட பயன் மற்றும் ஒத்துழைப்புக்கு ஆதரவாக கைவிடப்படலாம் என்பதை இந்தப் பயணம் காட்டுகிறது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், ஜே.வி.பி. கட்சியின் தலைவர் ஒருவர், இந்தியப் பிரதமருடன் ஒரே அரசியல் தளத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என்ற எண்ணம் கூட இருந்தது நம்ப முடியாத சூழ்நிலை.
ஆனால் இன்று ஜனாதிபதி அநுர குமார இந்தியாவுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
ஜே.வி.பி.யின் தலைமையானது, புது டில்லியுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதற்கு இதுவரை காட்டி வந்த உறுதியான பிம்பத்தில் இருந்து விலகியிருப்பது, இந்தியாவுடனான அக்கட்சியின் உறவு எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்று 'த இந்தியன் எக்ஸ்பிரசில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.