யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கழகக் காரியாலத்தில் இடம்பெற்றது.
இதன்போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு வழங்குவதாக தெரிவித்தமையுடன் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில்- கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பல வகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை.
பல ஒப்பந்தங்கள், பல்வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தர் ஐயா வரை ஏமாற்றப்பட்டார்கள்.
ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எமது தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ் மக்களும் இதனை பயன்படுத்தி சங்குச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்-என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.