ஜனாதிபதி வாக்குறுதிகளை செயலில் காட்டவேண்டும், வெற்றுப் பேச்சுகள் நன்மையளிக்காது காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுட்டிக்காட்டு

1 month ago



ஜனாதிபதி வாக்குறுதிகளை  செயலில் காட்டவேண்டும், வெற்றுப் பேச்சுகள் நன்மையளிக்காது காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுட்டிக்காட்டு

வவுனியா, யாழ்ப்பாணத்திலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். 

அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், தமிழர்களின் நிலங்களை மீட்டுத் தருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வாக்குறுதிகளை செயலிலேயே அவர் காட்டவேண்டும்.

வெற்றுப் பேச்சுகள்  நன்மையளிக்கப் போவதில்லை - இவ்வாறு வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் நிலங்களை மீட்டுத் தருவேன் என அநுர உண்மையாக நினைத்தால், முக்கியமான முதல் நடவடிக்கையாக மணலாறு நிலத்தை தமிழர்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும்.

இந்த நிலம், ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சியில் தமிழர்களின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையிலான தொடர்பைத் துண்டிக்கத் திட்டமிட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழர்களின் துன்பத்தை அநுர அரசாங்கம் உணர்ந்து கொண்டால், ஐ.நா .மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை            ஏற்கவும், தமிழர்களை ஒடுக்குவதற்கான பயங்கரவாதச் சட்டத்தை நீக்கவும் வேண்டும்.

முன்னைய சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன் அளித்து, பின்னர் அதை மீறியுள்ளனர்.

எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றி செயல்களில் தங்களை நிரூபிக்க வேண்டும் - என்றார்.