யாழ்.அஜந்தனின் 'மரணங்களின் சாட்சியாக', 'ஆற்றுப்படுத்தும் கலையும் சிலையும்' இரு நூல்களின் வெளியீட்டுவிழா

1 month ago



எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான யாழ். கந்தர்மடம் அஜந்தனின் 'மரணங்களின் சாட்சியாக' எனும் சிறுகதைத் தொகுதி மற்றும் 'ஆற்றுப்படுத்தும் கலையும் சிலையும்' கட்டுரைத் தொகுதி ஆகிய இரு நூல்களினதும் வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்.ராஜா கிறீம் ஹவுஸ் ஹம்சியா மகாலில் இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளரும் சிரேஷ்ட உளவியலாளருமான கோகிலா மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடனும், ஆசிரியர்    சிறீயதுர்சன் மற்றும் மாணவர்களின் இசை விருந்துடனும் இனிதே ஆரம்பமாகியது.

கோகிலா மகேந்திரனின் தலைமை உரையைத் தொடர்ந்து எங்கட புத்தகங்கள் நிறுவனர் குலசிங்கம் வசீகரனால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.

நூலின் வெளியீட்டுரையினை ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியரான கலாமணி பரணீதரன் நிகழ்த்தினார்.

தலைமைப் போதகர் லெஸ்லி மத்தியூஸ் நூல்களினை வெளியிட்டு வைக்க முதற் பிரதிகளை பிராந்திய முகாமையாளர் ம.பிரபாகரன், யாழ் டிறிபேக் கல்லூரி அதிபர் செ.பேரின்பநாதன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப் பட்டது.

'மரணங்களின் சாட்சியாக' சிறுகதை தொகுதி நூல் தொடர்பிலான கருத்துரையினை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரும் - எழுத்தாளருமான இ.இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.

'ஆற்றுப்படுத்தும் கலையும் சிலையும்' கட்டுரைத் தொகுதி நூல் தொடர்பிலான கருத்துரையினை ஆயுர் வேத மருத்துவரும், சிரேஷ்ட உளவளத் துணையாளருமான புவனலோஜினி ஜீவானந்தம் நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் கந்தர்மடம் அஜந்தனினால் வரையப்பட்ட ஓவியங்கள், நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பங்கேற்று சிறப்பித்தவர்களுக்கு கோகிலா மகேந்திரனால் வழங்கி வைக்கப்பட்டது.

எழுத்தாளர்கள், உளவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந் நிகழ்வு நடந்தேறியமை        குறிப்பிடத்தக்கது.