சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்னைக்கு உரிய தீர்வு வேண்டும்- எம.பி கஜேந்திரன் கோரிக்கை

6 months ago


யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

யாழில் கடந்த சில நாட்களாக பதற்ற மான சூழல் ஒன்று நிலவி வருகின்றது. குறிப்பாக யாழில் நேற்றைய தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் வீதியை மறித்து பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் பிரச்னைகள் தொடர்பாக பல விடங்களை அம்பலப்படுத்தியிருந்தார். அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே பொதுமக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்கள், சாவகச் சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அங்கு பல்வேறு ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன் சாவகச்சேரி வைத்தியசா லைக்கு சிகிச்சைக்குச் செல்கின்ற பெரும்பாலான நோயாளர்கள் அநாவசியமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், இரவு வேளைகளில் வைத்தியர்கள் வைத்திய சாலையில் இருப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை குறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு முன்னர் விபத்து சத்திரசிகிச்சை அலகு நிர்மாணிக்கப்பட்டபோதும் அதற்கான பணியாளர்கள் தெரிவு செய்யப்படவில்லை எனவும், தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம், புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடைய நிதிப்பங்களிப்புடன் 17 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வைத்தயசாலைக்கு கையளிக்கப்பட்டபோதும அவை பயன்படுத்தப்படாமல் பழுதடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே இது குறித்து உடனடியாக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.



அண்மைய பதிவுகள்