இஸ்ரேலியர்கள் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத்தலத்தின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்.--புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் தெரிவிப்பு

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத்தலத்தை இலக்கு வைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு நேற்று(17) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அது தொடர்பிலான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் இணைந்து அறுகம்மை சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக கூறி 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் 90 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட அவர்களில் மூவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
