இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைதுக்கு தீர்வு வேண்டி தமிழக முதல்வரால் இந்திய பிரதமருக்கு மனு.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நிரந்தரதீர்வை காணவேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமரிடம் கையளித்துள்ள மனுவில் தமிழக முதல்வரின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது சமக்ர சிக்ஷ அபியான் என்ற மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் "பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன்.
இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தேன். இந்த சந்திப்பு ஓர் இனிய சந்திப்பாக அமைந்தது.
பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் எங்களிடம் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கைகளில் தான் இருக்கிறது.
சந்திப்பின் போது 3 முக்கியக் கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
முதலாவதாக சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டப் பணிகளைப் போல் 2-ம் கட்டப் பணிகளையும் மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து நடத்த வேண்டும்.
அதற்கான மத்திய அரசின் நிதியை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
இரண்டாவதாக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் கட்டத் தவணையை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
மூன்றாவதாக தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியுள்ளோம்.
நமது மீனவர்களை சிறைப்பிடித்து இலங்கைக் கடற்படையினர் துன்புறுத்துகின்றனர். இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
இலங்கையின் புதிய அதிபரிடம் இதுபற்றி வலியுறுத்தக் கேட்டுக் கொண்டுள்ளேன்" என்றார்.