யாழ்.மருத்துவமனைகளில் 76 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுவரை 76 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுவரையான 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் 15 பேரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 2 பேரும் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை இரு மருத்துவமனைகளிலும் 39 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்பாணத்தில் ஏழு பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் எலிக் காய்ச்சல் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுமுன்தினமும் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் காய்ச்சல் காரணமாக ஏற்படும் திடீர் உயிரிழப்புகள் தொடரும் நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் நேற்றும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குச் சென்று கலந்துரையாடியுள்ளார்.