13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை விட்டு விட்டு பேசுவோம், சம்பந்தனின் இறுதி நிகழ்வில் ரணில்
13ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகார விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சாத்தியமான தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசுவோம்."
இன்று திருகோணமலையில் இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்திலேயே ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுப்பது குறித்து சம்பந்தனோடும் ஏனைய தமிழ் தலைவர்களோடும் பேசி வந்திருக்கிறேன். அதற்கான முன் முயற்சிகளை ஆரம்பித்தோம். ஆனால் நாடு வங்குறோத்து நிலை யில் இருந்ததால் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அதனால் தீர்வு முயற்சிகள் தாமதமாகின. இப்போது நாங்கள் மீண்டும் அதனை ஆரம்பிக்க வேண்டும்.
13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை ஒரு புறம் வைத்து விட்டு நாங்கள் தீர்வைப் பற்றி விரிவாக பேசலாம்.காணி ஆணை குழுக்களை நியமிப்பதற்கான சட்டமூலம் தயாராக இருக்கின்றது.
மாகாண சபை தேர்தல் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஆனாலும் புதிய முறையிலான தேர்தல் சிக்கல் நிறைந்தது என்று கருதப்படுவதால் பழைய முறையில் தேர்தலை நடத்தலாம் என யோசிக்கிறோம். ஆயினும் இளை ஞர், யுவதிகளுக்கான பிரதிநிதித் துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பதவியை இழக்காமல் மாகாண சபைகளில் போட்டியிடுவதற்கான மாற்றங்களையும் நாம் கொண்டு வர யோசிக்கிறோம்.
சம்பந்தன் தமிழர்களின் ஒரு சிறந்த தலைவர். அது மாத்திரமல்ல,அவர் இலங்கை மக்களின் தலைவரும் கூட. சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். 2018 முறையற்ற விதத்தில் என்னுடைய பிரதமர் பதவி சவாலுக்கு உட்படுத்தப்பட்ட போது சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக அவர் காரியமாற்றினார்.முதலில் ஜனாதிபதித் தேர்தல். பின்னர் மாகாண சபைத் தேர்தல், நாடாளு மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். -என்றார்