இலங்கையில் அரகலயவின் போது தமது சொத்துகளுக்கு இழப்பீடாக முன்னாள் எம்.பிகள் 43 பேர் 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாகப் பெற்றனர்.

இலங்கையில் அரகலயவின் போது தமது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எனக்கூறி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 43 பேர் மொத்தமாக 122 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாகப் பெற்றுள்ளனர்.
அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் பெறப்பட்ட இழப்பீடுகள் தொடர்பான விவரங்களை, ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் நேற்று முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரகலய போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் என்றுகூறி பெருமளவு தொகையை இழப்பீடாகப் பெற்றுள்ளனர்.
இதன்படி, ஜனக பண்டார தென்னக்கோன் ஒரு கோடியே 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும், ரோஹித அபே குணவர்த்தன ஒரு கோடியே 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவையும், சீதா அரம்பே பொல ஒரு கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவையும், சான் பிரதீப் ஒரு கோடியே 71 லட்சத்து 30 ஆயிரம் ரூபாவையும் இழப்பீடாக பெற்றுள்ளனர்.
அத்துடன், செயான் சேமசிங்க ஒரு கோடியே 85 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவையும், இந்திக்க அநுருத்த ஒரு கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும், மிலான் ஜயதிலக்க 2 கோடியே 23 லட்சம் ரூபாவையும், ரமேஷ் பத்திரண 2 கோடியே 81 லட்சம் ரூபாவையும், துமிந்த திஸாநாயக்க 2 கோடியே 88 லட்சம் ரூபாவையும், கனக ஹேரத் 2 கோடியே 92 லட்சம் ரூபாவையும் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடாகப் பெற்றுள்ளனர்.
மேலும் டி.பி. ஹேரத் 3 கோடியே 21லட்சம் ரூபாவையும், பிரசன்ன ரணவீர 3 கோடியே 27 லட்சம் ரூபாவை யும், சாந்த பண்டார 3 கோடியே 91லட்சம் ரூபாவையும், எஸ்.சந்திரசேன 4 கோடியே 38 லட்சம் ரூபாவையும், சனத் நிஷாந்த 4 கோடியே 27 லட்சம் ரூபாவையும், சிறிபால கம்லத் 5 கோடியே 9 லட்சம் ரூபாவையும், அருந்திக்க பெர்ணான்டோ 5 கோடியே 52 லட்சம் ரூபாவையும், பிரசன்ன ரணதுங்க 5 கோடியே 62 லட்சம் ரூபாவையும், கோகிலா குணவர்தன 5 கோடியே 87 லட்சம் ரூபாவையும், நிமல் லான்சா 6 கோடியே 92 லட் சம் ரூபாவையும், அலி சப்ரி ரஹீம் 7 கோடியே 9 லட்சம் ரூபாவையும், ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 9 கோடியே 34 லட்சம் ரூபாவையும், கெஹலிய ரம்புக்வெல 9 கோடியே 59 லட்சம் ரூபாவையும் இழப்பீடாக பெற்றுள்ளனர்.
விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டாலோ, அனர்த்தத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டாலோ இழப்பீட்டை பெறுவதற்கு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்.
ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க அதிகாரிகளை மிரட்டியே அரசியல்வாதிகள் மிக இலகுவாக பெருமளவு இழப்பீட்டை பெற்றுள்ளனர்.
இப்படியான அரசியல் கலாசாரமே எமது நாட்டில் இருந்தது, இதனையே மாற்றிவருகின்றோம், இப்படியான நபர்களே ஒன்றிணைவது தொடர்பில் தற்போது பேச்சு நடத்தி வருகின்றனர் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
