60 மாடிகள் கொண்ட கிரிஷ் கட்டிடம் பராமரிக்கப்பட வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிப்பு

1 month ago



ஏதேனும் கீழே விழுவதன் ஊடாக பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள 60 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டிடம் பராமரிக்கப்பட வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிரிஷ் கட்டிடத்தின் உரிமை நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடாக நிர்மாணிக்க ஆரம்பித்த இந்தக் கட்டிடம் கொழும்பு கோட்டையில் உள்ள மிக உயரமான கட்டிடமாகும்.

கடந்த கொவிட் காலப்பகுதியில் இங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன் இதன் கட்டுமானம் முற்றாக நிறுத்தப்பட்டது.

இக்கட்டடத்தின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்ட நிலையில், அதன் சில சிதைவுற்ற பாகங்கள் கீழே விழுந்தவாறு உள்ளன.

கடந்த ஒக்டோபரில் இதுபோன்ற விபத்தில் கார் ஒன்று பலத்த சேதமடைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த கட்டிடத்தின் பாதுகாப்பற்ற தன்மை குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததுடன், அது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதற்காக, கோட்டை பொலிஸாரின் அறிவித்தலின் பேரில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் ஒருவர், சேதமடைந்த காரின் உரிமையாளர், அது நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடத்தின் உரிமையாளர் மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

கிரிஷ் கட்டிடம் சார்பில் கட்டுமான நிறுவனத்தின் சில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இரு தரப்பினரின் சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி, கிரிஷ் கட்டிடத்திலிருந்து எந்த ஒரு பொருளும் கீழே விழுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும், பழுதடைந்த துண்டுகள் கீழே விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கட்டடத்தில் ஏதாவது விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான கட்டிடம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள், அங்கிருந்து விழக்கூடிய இரும்பு பாகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்