அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எமக்கு இருந்திருந்தால் நல்லாட்சியில் பெற்றிருப்போம் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எமக்கு இருந்திருந்தால் நல்லாட்சியில் பெற்றிருப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசுடன் ஓர் இணக்கப்பாட்டுக்குச் செல்வதாக இருந்தால் எவ்வாறான நிபந்தனைகளை நாங்கள் முன்வைப்போம் என்பது உதய கம்மன்பிலவுக்குத் தெரிகின்றது.
ஆனால், எங்கள் தரப்பில் உள்ள பலருக்கு அது தெரியவில்லை." - என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழரசுக் கட்சி அமைச்சரவையில் பங்குதாரர்களாக மாறுமா? இல்லையா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது.
மக்களிடமும் அத்தகைய கேள்வி உள்ளது.
காரணம் மக்களுடைய சில பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வைப் கொடுக்காமல் இருக்கின்றோம்.
ஆனால், எங்களுடைய பிரதானமான பிரச்சினையான அரசியல் உரிமை பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் வரையில் நாங்கள் அரசில் பங்குபற்றமாட்டோம் என்ற எண்ணம் எங்கள் மத்தியில் உள்ளது. அது கொள்கை அல்ல.
நாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற் பதாக இருந்தால் நல்லாட்சி எனத் தங்களை அழைத்துக் கொண்ட ஆட்சிக் காலத்தில் எதிர்த்தரப்பில் இருந்து நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்கினோம்.
அப்போதே நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்க முடியும்.
ஒருவேளை உதயகம்மன்பில ஜனாதிபதியாக இருந்திருந்தால் என்னை வெளி விவகார அமைச்சராக நியமித்திருக்கக் கூடும்.
இதில் முக்கியமான ஒரு விடயத்தை எல்லோரும் தவறவிட்டிருக்கின்றனர்.
நான் இரண்டு நிபந்தனைகளை முன் வைத்ததாகவும், அதற்கு அநுர அரசு இணங்கியதாகவும் உதய கம்மன்பில கூறுகின்றார்.
அந்த நிபந்தனைகள் என்னவென்றால் சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறை, ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை. இதிலும் ஒரு முக்கியமான விடயம் உதய கம்மன்பிலவுக்குத் தெரிகின்றது.
அதாவது நாங்கள் அரசுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதாக இருந்தால் இவ்வாறான நிபந்தனைகளையே முன் வைப்போம் என்று உதய கம்மன் பிலவுக்குத் தெரிகின்றது.
ஆனால், எங்கள் தரப்பில் உள்ள பலருக்கு அது தெரியவில்லை என்றார்.