அரசுக்கு நெருக்கமானவர்கள் வங்கிகளில் கடன்பெற்று 65,000 கோடி ரூபா மோசடி - சம்பிக்க வெளியிட்ட அதிர்ச்சி
தற்போது அமைச்சர்களாகப் பதவி வகிப்போர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் 10 பேர் இரு அரச வங்கிகளுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து கடன் செலுத்துவதை தவிர்த்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதனால் சாதாரண பிரஜை ஒருவருக்கு வங்கிக் கடன் வழங்கமுடியாத நிலைமைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்கவிடம் கருத்தறிந்துள்ளது.
அவர் அந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இரு அரச வங்கிகளிடம் 65 ஆயிரம் கோடி ரூபா கடன்பெற்று அதை மீளச் செலுத்தாது செயற்படும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேக தடவைகள் கேள்வியெழுப்பி இருந்தாலும் அதற்குச் சரியான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அவர்கள் வங்கிகளில் கடன் பெற்று சுமார் 20 வருடங்களாக அவற்றை மீளச் செலுத்தாது வெவ்வேறு வழிமுறைகளில் செயற்பட்டு வருகின்றனர்.
இரு அரச வங்கிகளிலும் காணப்படுவது நாட்டின் சாதாரண மக்கள் வைப்பிலிட்ட பணம் என்பதால், அவற்றை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் கடனாகப் பெற்றுக் கொண்டு மோசடிகளில் ஈடுபடுவது வங்கிகளால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலை என்று அவர் கொழும்பு ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.