கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கு 10 வயதை பூர்த்தியடைந்த மாணவியருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்.-- சுகாதார அமைச்சு அறிவிப்பு
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நோக்கில் 10 வயது பூர்த்தியடைந்த - தரம் 6இல் கல்வி கற்கும் சகல மாணவியருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வருடாந்தம் 800 முதல் ஆயிரம் பேர் வரையிலானவர்கள் கர்ப்பப்பை வாய் புற்று நோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
எனவே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுப்பதற்காக 10 வயது பூர்த்தியடைந்த - தரம் 6இல் கல்வி கற்கும் சகல மாணவியருக்கும் எச். பி. வி. தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எச். பி. வி. என்ற இந்தத் தடுப்பூசி இரு தடவைகள் செலுத்தப்பட வேண்டும்.
முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் பூர்த்தியடைந்ததும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
பாடசாலைகள் ஊடாக தடுப்பூசி பெறமுடியாத மாணவியர் தமது பகுதியின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, பெற்றோர்களும் மாணவிகளும் எந்தவித அச்சமுமின்றி இந்தத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.