மெக்சிகோவில் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை அதிகாரபூர்வ தரப்புகள் உறுதி செய்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவில் நேற்று முன்தினம்(02) ஜனாதிபதி, 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில், 61 வயதான கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார்.
இவர், இந்த தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் என அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், கிளாடியா ஷீன்பாம், டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நகர மேயாராக பணியாற்றிய கிளாடியா ஷீன்பாம், காலநிலை விஞ்ஞானியாகவும், மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவராகவும் விளங்குகின்றார்.
மெக்சிகோவில், 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மெக்ஸிகோ ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிளாடியா ஷீன்பாம் தனது வெற்றி உரையில், "நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும்.தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.