யாழில் இருந்து முல்லைத்தீவுப் பாடசாலைகளுக்கு சென்று வரும் ஆசிரியர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு பொலிஸார் உடந்தையா?



யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுப் பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் ஆசிரியர்கள் சென்றுவரும் நிலையில், அவர்கள் பயணித்த பேருந்தை இலக்கு வைத்து கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுப் பாடசாலைகளுக்குச் சென்றுவரும் ஆசிரியர்களின் பேருந்து நேற்றையதினம் (நேற்றுமுன்தினம்) தனியார் சிலருடன் இணைந்து போக்குவரத்துப் பொலிஸாரால் பரந்தனில் வழிமறிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாகனச் சாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்துப் பிரச்சினைகளுக்காகத் தாம் இவ்வாறு வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று வருவதாகத் தெரிவித்த போதும் பொலிஸார் அவ்வாறு செல்ல முடியாது என்று தெரிவித்து தண்டம் விதித்துள்ளனர்.
குறித்த பொலிஸாரின் அடாவடித்தனத்தின்போது வேறு நபர்கள் சிலர் அருகில் இருந்ததாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே ஆசிரியர்கள் பயணித்த வாகனத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் சிலர் செயற்பட்டிருந்த நிலையில் இன்று (நேற்று) மாலை முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் பளைப் பகுதியில் வைத்துக் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றைய (நேற்றுமுன்தினம்) பொலிஸாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான இன்றைய (நேற்றைய) தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே சந்தேகம் எழுகின்றது.
இதுகுறித்து வடக்கு ஆளுநர் உடனடியாகப் பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களும், உடந்தையாகச் செயற்பட்டவர்களும் உடனடியாக கைதுசெய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்றுச் செயற்படும் அரசாங்கம் ஆகக் குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கேனும் ஆவன செய்ய வேண்டும்.
பொலிஸார் முறையற்ற வகையில் செயற்படுவதையும், ஏனையவர்களுக்கு முறையற்ற வகையில் உடந்தையாகச் செயற்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
