கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்ட செய்தியை இருட்டடிப்புச் செய்த அரச ஊடகப் பிரிவு
முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிப்புத் தொடர்பில் மக்கள் இன்று போராட்டம் நடத்தியிருந்தனர்.
அவர்களில் இருவரை வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ், அரச தலைவரிடம் அழைத்துச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் அரச தலைவர் ஊடகப் பிரிவு இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், இரண்டு பெண்கள் மாத்திரமே போராடியிருந்த நிலையில் அவர்களை ஆளுநர் சந்தித்திருந்தார் என்றும், ஆளுநரிடம் அரச தலைவரை சந்திக்க கோரிக்கை விடுத்ததாகவும் இதை ஆளுநர் அரச தலைவரிடம் தெரியப்படுத்தி அதையடுத்து அரச தலைவர் அவர்களைச் சென்று சந்தித்தாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அவர்கள் முன்வைத்த கேப்பாபிலவு காணிக்கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அரச தலைவர் உறுதியளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரச தலைவர் கலந்து கொண்ட நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு வெளியே மக்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் அரச தலைவரை சந்திக்க முற்பட்டபோது சிறிலங்காப் பொலிஸார் தடுத்தனர். இதன் பின்னர் அங்கு வந்த ஆளுநர் அவர்களின் மனுவைப்பெற்றுக்கொண்டார்.
அதனையடுத்து போராட்டக்காரர்களில் இருவர் பொலிஸாரின் வாகனத்தில் ஏற்ற செல்லப்பட்டே அரச தலைவரை சந்திக்க செய்யப்பட்டனர்.
ஆனால் இதை மறைத்து அரச தலைவர் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை அனுப்பி வைத்துள்ளது.