ஜனாதிபதி தேர்தல் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 41 நிலையங்களானது 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச்சீட்டுகளையும் அதற்குரிய இதர ஆவணங்களையும் விநியோகிக்கும் மற்றும் கையேற்கும் நிலையமாக செயற்படவுள்ளது.
அந்த நிலையங்களுக்கு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும் மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்ட அலுவலகர்களின் பங்களிப்பானது காத்திரமானது.
மேலும், 20.09.2024 ஆம் திகதி அன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு உரிய வகையில் வாக்குப் பெட்டிகளையும் வாக்குச் சீட்டுக்களையும் இதர ஆவணங்களையும் கையளிக்கும் அதேவேளை 21.09.2024 ந் திகதி வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவர்களால் கையளிக்கப்படவுள்ள வாக்குப் பெட்டிகளையும் இதர ஆவணங்களையும் உரிய வகையில் பெற்றுக்கொள்வதில் மிக வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இத் தேர்தல் சிறப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார்.
இச் செயலமர்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் . இ.கி.அமல்ராஜ் வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் கையேற்றல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.