ஆம்ஸ்ட்ராங்க் கொலைக் குற்றத்தில் கைதான சந்தேகநபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

5 months ago


பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் திகதி, பெரம்பூர் வேணு கோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னை மட்டு மல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திரு வேங்கடம், சந்தோஷ், செல்வராஜ் திருமலை உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 11 பேரிடமும் பொலிஸார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான பொலிஸார் புழல் நோக்கி அழைத்துச்சென்றனர். மாதவரம் ஆட்டுத் தொட்டி அருகே சென்றபோது பொலிஸாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார்.

இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் புழல் வெஜிடேரியன் நகரில் காலி மனையில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கொலையாளிகள் அடிக்கடி கூடி சதித் திட்டம் தீட்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று என கூறப்படுகிறது. பொலிஸார் திருவேங்கடத்தை சுற்றி வளைத்த போது, தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பொலிஸாரை நோக்கி சுட்டார்.

இதையடுத்து தனிப்படை பொலிஸ் ஆய்வாளர் முகமது புகாரி திருவேங் கடத்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் வலது பக்க வயிறு மற்றும் இடது மார்பில் குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் சுருண்டு விழுந்தார். அவரை மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் என் கவுன்ட்டர் நடந்த இடம் மற்றும் மருத் துவமனையில் வைக்கப்பட்டுள்ள சட லத்தை பார்வையிட்டனர்.

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இதே குன்றத்தூர் திருவேங்கடம், தாமரைப் பாக்கம் கூட்ரோட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான புளியந் தோப்பு தென்னரசு கொலை வழக்கு உட்பட 3 கொலை வழக்குகள் உட்பட மேலும் சில வழக்குகளில் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உணவு விநியோகஸ்தர் போல பெரம்பூர் பகுதியில் பத்து நாள்களாக சுற்றித்திரிந்து ஆம்ஸ்ட்ராங்கின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, கச்சிதமாக கொலை திட்டத்தை செயல்படுத்த முக்கிய பங்குவகித்த வர் திருவேங்கடம் என பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்