யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்ய கொன்த, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு சீரற்ற காலநிலை தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் கேட்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைகள், தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு உருவாகுவதற்கான காரணம், உடனடியான தேவைகள், டெங்கு நுளம்பின் தாக்கத்தினை சீராக்குதல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவராணம், உடைமை இழப்புக்கான நிதியுதவிகள், சுகாதாரப் பணியாளர்கள், இராணுவத்தினர், முப்படையினரின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கல் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
இவ்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, பிரதேச செயலர்கள் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.