வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

1 month ago



வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றுள்ளது.

இதன்போது, நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் நினைவு சார்ந்த திருவுருவப் படம் அங்கிருந்து மேள, தாள வாத்திய இசையுடன் எடுத்து வரப்பட்டு நகரசபை கலாசார மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கான அகவணக்கத்தை தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கும், மாவீரர்களின் நினைவு சார்ந்த பொது படத்திற்கும் மலர் தூபி, மாலை அணிவித்து தீபமேற்றி மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்களின் கண்ணீராலும், கதறலாலும் மண்டபமே சோகமானது.

தொடர்ந்து, நினைவு உரைகள், நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.