மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 40 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்குப் பணத்தை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகப் பணம் கொண்டு செல்லும் நிறுவனத்தின் சாரதி ஒருவர் 7.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைத் திருடி, அதே வாகனத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் கம்பஹா - உக்கல்கொட பகுதியில் வாகனத்தை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு மற்றுமொருவருடன் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பணத்தில் 3 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதாகியிருந்தார்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.