சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும்.-- தற்போதைய அரசிடம் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை

6 days ago



சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று தற்போதைய அரசாங்கத்திடம் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தற்போதைய நீதிமன்ற செயன்முறை ஆகியவற்றின்மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும் சந்தியா எக்னெலிகொட கூறியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று முன்னாள் கடற்படைச் சிப்பாய் என்று தன்னை வெளிப்படுத்திய நபரொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே எக்னெலிகொடவுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று தற்போதைய அரசாங்கத்திடம் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணை செயன்முறை மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதனால், நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சந்தியா எக்னெலிகொட் மேலும் தெரிவித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்