இலங்கையில் போதைப் பொருள் குற்றங்களால் சிறை செல்பவர் எண்ணிக்கை அதிகரிப்பு, சிறையில் நெரிசல்.-- தேசிய தணிக்கை அலுவலகம் உறுதிப்படுத்தியது
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களால் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிறைச்சாலைகளில் அசாதாரண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரையில், நீர் கொழும்பு சிறைச்சாலையில் உள்ள மொத்த 2225 கைதிகளில் 1442 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,
இது 65 வீதமாகும். அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வரையில் களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மொத்த 1275 கைதிகளில் 885 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது 69 வீதம் என தேசிய கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களமானது, 2023ஆம் ஆண்டில் ஊழியர் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 9820 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்தத் தொகையானது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1060 இலட்சம் ரூபாய் அதிகரிப்பு என கணக்காய்வு அறிக்கை கூறுகின்றது.