இலங்கை திட்டமிடல் சேவையின் 3 ஆம் தரத்துக்கு தெரிவானவர்களில் தமிழ், முஸ்லிம் பரீட்சாத்திகள் உள்வாங்கப்படவில்லை.
இலங்கை திட்டமிடல் சேவையின் 3 ஆம் தரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுள் தமிழ் மொழி மூலம் தோற்றிய தமிழ், முஸ்லிம் பரீட்சாத்திகள் எவரும் உள்வாங்கப்படவில்லை.
அவர்கள் புறக்கணிக்கப்பட்டமை அவர்களது அடிப்படை உரிமையை மீறும் பாரிய அநீதியாகும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நியமனத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப் பட்டியலை அரச சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கை திட்டமிடல் சேவைக்காக 43 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிங்கள மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களாவர்.
தமிழ், சிங்கள மொழி மூலம் போட்டிப் பரீட்சையை நடாத்திய பின்னர் நியமனத்துக்காகத் தமிழ் மொழி மூலத்தைக் கவனத்தில் கொள்ளாமல் சிங்கள மொழியை மட்டும் கவனத்தில் கொள்வதானது விண்ணப்பதாரிகளின் அடிப்படை மொழி உரிமை மீறும் பாரிய அநீதியாகும்.
இவ்வாறு ஒரு மொழியை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இதனை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் சிவில் சமூக அமைப்பினரும் அரச உயர் மட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு பெற முயற்சிக்க வேண்டும்.- என்றார்.