யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 week ago



யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான கடுகதி ரயில் சேவை கைவிடப்பட்டு, இனி வாராந்த சேவையாக மாற்றப்படும் நிலையில், யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகள் எதிர்காலத்தில் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில் ஐந்து சேவைகளும், யாழ்ப்பாணம் - அநுராதபுரத்துக்கும் இடையில் இரண்டு சேவைகளும் இடம்பெற்று வந்தன.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு அதிகாலை 3.45 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை ஸ்ரீதேவி, உத்தரதேவி. யாழ்தேவி. கடுகதி மற்றும் தபால் ரயில் என்பன இயக்கப்பட்டன.

ஆனால், தற்போது யாழ்தேவி மற்றும் கடுகதி ஆகிய இரண்டு சேவைகளே கொழும்புக்கு இயக்கப்படுகின்றன.

இன்று முதல் கடுகதி ரயில் சேவைகளும் தினசரிச் சேவையாக அல்லாமல் வாராந்தச் சேவையாக மாற்றப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், யாழ்ப்பாணத்தின் ரயில் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரையிலான ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு, வேக அதிகரிப்புச் செய்யக்கூடிய வகையில் நவீனத்துவம் மிக்கவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், சேவைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக குறைக்கப்படுகின்றமை ஏன்? என்றும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், ஆரம்பத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகமாகவே சேவைகள் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சேவைக் குறைப்பு நிரந்தரமாக்கப்பட்டுள்ளமை தவறான அணுகுமுறை என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில், கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலயத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவித்ததாவது:-

கடுகதி ரயில் சேவைகள் தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையிலேயே வாராந்த சேவையாக மாற்றப்பட்டுள்ளன.

நிதி நெருக்கடியும் ரயில் சேவைகளில் கணிசமான பின்னடைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்ற நிலையில், புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்கும் பட்சத்தில், யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை வினைத்திறனாக்க முடியும் - என்றனர். 

அண்மைய பதிவுகள்