அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்தும் அரசு செயற்படவில்லை.-- காஞ்சன விஜே சேகர கவலை
அறுகம்குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து ஒக்டோபர் 07 ஆம் திகதி தகவல் கிடைத்த போதிலும், அரசாங்கம் செயல்படாமல் இருப்பது குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜே சேகர கவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ள அவர், தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசாங்கம் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை.
தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சுற்றுலா வருமானம் நாட்டின் மிக முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும்.
அரசாங்கத்திடம் முன்கூட்டியே தகவல் இருந்திருந்தால் மற்றும் தூதரகங்களுக்கு அது தொடர்பில் விளக்கியிருந்தால், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயண ஆலோசனை எச்சரிக்கையை தடுத்திருக்கலாம்.
அரசாங்கம் குறைந்தபட்சம் இப்போது தூதரகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும்.
அத்துடன், இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்க வெளிநாட்டு தூதரகங்களுடன் இணைந்து செயல்பட வேண் டும்- என்று குறிப்பிட்டுள்ளார்.