வடக்கில் பெரும்பான்மையான பொலிஸார் குற்றமிழைக்கின்றனர் - பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கில் சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இல்லை. அங்கு பணியாற்றும் பெரும்பான்மையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றமிழைப்பவர்கள் என்பதுடன் மக்களிடம் லஞ்சம் பெறும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.
அப்பகுதிகளில் அவர்கள் லஞ்சம் பெற்று தெற்கில் சொத்துக்களை குவித்துள்ளது தொடர்பில் அரசு பொலிஸ் அதிகாரிகளின் சொத்து மதிப்பீட்டு பத்திரங்களை கோர வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) புதன்கிழமை எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் கடந்த மே 18ஆம் திகதி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் கலந்துகொண்டிருந்தார். அவரின் வருகையை நாங்கள் வரவேற்கின்றோம்.
அத்துடன் அவரை எங்களால் சந்திக்க முடியாது போயுள்ளது. இதனால் அவரிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம்.
கடந்த 12 வருடங்களாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் பொறுப்புக்கூறல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டுள்ளது.
அந்த பொறுப்புக் கூறலில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றது.
அந்தப் பேரவைக்கு குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரங்கள் இல்லாமையினால் இலங்கை அரசாங்கம் அது தொடர்பாக நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுக்கப் போவதில்லை என்பது கடந்த 12 வருடங்களாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பொறுப்புக் கூறல் விடயத்தை மனித உரிமைகள் பேரவையில் இருந்து மீண்டும் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஒப்படைத்து செயலாளர் நாயகம் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னிப்புச் சபை செயலாளரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான விடயங்கள் வலியுறுத்தப்படுகின்றது.
13ஆம் திருத்தம் தமிழ் மக்களால் 36 வருடங்களாக நிராகரிக்கப்படும் விடயமாகும்.
இதனை நல்லிணக்கத்திற்கான பொறிமுறையாக குறிப்பிடுவதை கைவிட்டு தமிழ்த்தேசியம், இறைமை, சுயநிர்ணயம் அடிப்படையில் சமஷ்டி யாப்பை கொண்டுவருவதற்கான அழுத்தத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
அதேவேளை 2016 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சி அடிப்படையிலானது. அதனையும் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர்.
இதனால் முழுமையான தமிழ்த் தேசியமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சமஷ்டி யாப்பை கொண்டு வருவதற்கான அழுத் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்படுத்த வேண்டும்.
அதேநேரம் சட்டம் ஒழுங்கு தொடர்பான விடயத்தில் வடக்கு, கிழக்கில் சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இல்லை.
அங்கு பணியாற்றும் பெரும்பான்மையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தென் பகுதிகளில் குற்றமிழைத்தவர்களே.
அரசியல்வாதிகளிடம் சொத்துக்கள் தொடர்பில் ஆவணங்களை கோரும் நீங்கள் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளின் சொத்து மதிப்பீட்டு பத்திரங்களை கோர வேண்டும்.
தென்பகுதிகளில் அமைக்கும் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கான பணத்தை வடக்கில் வசூலிக்கும் நடவடிக்கைகளிலேயே அவர்கள் ஈடுபடுகின்றனர்.
வீதிகளில் இலஞ்சம் பெறுவது, முன்னாள் போராளிகளை வதைத்து லஞ்சம் பெறுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
வடக்கு, கிழக்கில் சட்ட விரோத ஆட்சியை நடத்துவதன் ஊடாகவே தமிழர்களை ஒடுக்க முடியுமென்ற அணுகுமுறையை அனைத்து அரசாங்கங்கமும் முன்னெடுக்கின்றது.
சட்டஒழுங்கு அமைச்சர் இனவெறியுடன் செயற்படுபவராகவே இருக்கின்றார். எமது கட்சியின் தலைவர் கொழும்பில் கைது செய்யப்படும்போது சபாநாயகர் செயற்பட்ட முறையும் தவறாகும்.
உயர்மட்டத்திலேயே இப்படி நடக்கின்றதென்றால் கீழ்மட்ட மக்கள் எப்படி செயற்படுவார்கள் என்பதனை புரிந்துகொள்ளலாம்.
இந்த நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு கடமையாற்றிய நீதிபதியைக் கூட வெளியேற்றுமளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன.
உளவுத் துறையினருக்கும், பொலிஸாருக்கும் பணம் தேவைப்படும் போது முன்னாள் போராளிகளை அச்சுறுத்தி கப்பம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
ஒற்றையாட்சிக்குள் இதனை சீர்செய்ய முடியாது. தமிழ்த் தேசியத்தை அங்கீகரித்து சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வாருங்கள். அதன்மூலம் மட்டுமே இந்த நாட்டை கட்டி யெழுப்ப முடியும் என்றார்.