வடக்கில் 5 தொழிற்பேட்டை நிலையங்களுக்கு காணிகள் இனங்காணப்பட்டுள்ளது, வேலைத் திட்டங்கள் விரைவில்.-- அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

13 hours ago



வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்கு காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் நேற்று புதன்கிழமை சந்தித்து பேசினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் தற்போதைய வடக்கு மக்களின் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களான றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பிலும் நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வரமுடியாது இருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பிலும் ஆர்வத்தை வெளிப்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வெளிப்படுத்தினார்.

இந் நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைய பதிவுகள்